

சென்னை,
பாலிவுட் நடிகை சாரா அலிகான், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பரவும் டிரோல்கள் , ஆன்லைன் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில், ' சமூக ஊடக விமர்சனங்கள் உங்களின் மனநலனை பாதிக்கிறதா?' என்று சாராவிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நடிகை சாரா, விமர்சனங்கள் தன்னை பாதிப்பதாக கூறினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ""சமூக வலைதள விமர்சனங்களால் நான் பாதிக்கப்படுவதில்லை என்று சொன்னால் அது பொய். நான் நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறேன். ஒரு கலைஞராக நான் செய்யும் எல்லாமே எனது ரசிகர்களுக்காகத்தான். அவர்களை நான் ஏமாற்றமடையச் செய்யும்போது எனக்குள் பெரும் வருத்தம் ஏற்படுகிறது.
திரையுலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் எனது முழு கவனமும் மக்கள் மீது மட்டுமே இருந்தது. ஆனால், இந்தத் திரையுலகப் பயணத்தில் சில காலம் பயணித்த பிறகு, நமக்காகவும் நாம் உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். இதை எனது சினிமா வாழ்க்கையில் நான் சற்று தாமதமாகத்தான் கற்றுக்கொண்டேன்.
நாம் செய்யும் வேலையை நாம் உண்மையிலேயே ரசித்து, நமது நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துவிட்டால் ஒருவித நிம்மதி கிடைத்துவிடும். 'நான் என்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்துவிட்டேன், இனி எல்லாம் கடவுளின் கையில்' என்று நினைக்கும் போது, தேவையில்லாத மனக்குற்ற உணர்ச்சியோ அல்லது மன உளைச்சலோ நமக்கு ஏற்படுவதில்லை" என்றார்.
சாரா அலிகான் அடுத்ததாக ஆயுஷ்மான் குரானா, ரகுல் பிரீத் சிங் மற்றும் வாமிகா கபி ஆகியோருடன் 'பதி பத்னி அவுர் வோ தோ' என்ற காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இப்படம் கடந்த 15 அன்று திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.