மலையாள நடிகை பாலியல் புகார்: இயக்குனர் ரஞ்சித் பாலகிருஷ்ணனுக்கு 3 நாள் போலீஸ் காவல்

பாலியல் வழக்கில் இயக்குநர் ரஞ்சித்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மலையாள நடிகை பாலியல் புகார்: இயக்குனர் ரஞ்சித் பாலகிருஷ்ணனுக்கு 3 நாள் போலீஸ் காவல்
Published on

கொச்சி,

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் ரஞ்சித். படப்பிடிப்பின் போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக நடிகை ஒருவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். உடனடியாக கொச்சியில் மாஜிஸ்திரேட்டு முன்பாக ரஞ்சித் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையிலும் ரஞ்சித் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன. கடந்த 2024 ஆம் ஆண்டு, பெங்காலி நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஞ்சித் பாலகிருஷ்ணன், நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது கைதின்போது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை காவல் துறை பின்பற்றவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், உடல்நிலையையும் ஜாமீன் கோருவதற்கான காரணமாகக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் இயக்குநர் ரஞ்சித்தை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.செல்மத்திடம், காவல் துறை தரப்பில் 3 நாள்கள் காவலில் வைத்து ரஞ்சித்தை விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். அதேநேரத்தில் ரஞ்சித் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை பிறகு பரிசீலிப்பதாகவும் நீதிபதி அறிவித்தார்.

மலையாள சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் ரஞ்சித் பாலகிருஷ்ணன், மூன்று முறை தேசிய விருதுகள் வென்றுள்ளார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com