

சென்னை,
நடிகை ராதா அளித்த காசோலை மோசடி புகார் எதிரொலியாக ஏ.ஆர்.எஸ். கார்டனை ராதா அபகரித்துவிட்டார். அவர்தான் எனக்கு ரூ.97 கோடி தர வேண்டும் என நடிகை அம்பிகா பரபரப்பான புகார்களை தெரிவித்துள்ளார்.
நடிகை ராதா, அவரது சகோதரியான நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனன் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது சம்பந்தமாக நடிகை அம்பிகா, வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவரது சகோதரர் மல்லிகார்ஜுனன் மற்றும் சிலர் உட னிருந்தனர்.
அப்போது அம்பிகா கூறியதாவது:-
எனது தங்கை நடிகை ராதா என் மீது புகார் அளித்துள்ளார். நடிகை ராதா எனக்கு காசோலை கொடுத்தார் என்பது உண்மைதான். அந்த காசோலையின் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு வரவிடாமல் அவர் நிறுத்தியதும் உண்மை. ஏ.ஆர்.எஸ். கார்டன் உருவாவதற்கு நான்தான் மூல காரணம். திடீரென ஒரு நாள் பார்க்கும்போது அதன் பெயர்ப்பலகை மாற்றப்பட்டிருந்தது. அதில் மூன்றில் ஒரு பங்கு எனக்கும் உள்ளது.
இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் ராதா வழக்கிற்கு ஒத்துழைக்கவில்லை. தங்கம் என்றாலே ராதாவுக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது. என் தங்கை தனது கைப்பையைக் கூட மிகவும் கவனமாக வைத்திருப்பார்.
அப்படிப்பட்டவர் எப்படி காசோலையை தவறவிடுவார்? இந்த விவகாரத்தில் உண்மையை சொன்னால் ராதாவுக்குத்தான் சிக்கல். தவறு செய்து விட்டு அவரே முந்திக்கொள்கிறார். காசோலை கொடுத்ததும், அதை நிறுத்தி வைத்ததும் ராதாதான். எனவே, இதுகுறித்து நான்தான் வழக்கு தொடுக்க வேண்டும்.
ஏ.ஆர்.எஸ். கார்டன் முறையாக பிரிக்கப்படவில்லை. ஏ.ஆர்.எஸ். கார்டனை ராதா அபகரித்துவிட்டார். மொத்தமாக ரூ.97 கோடி வரவேண்டியுள்ளது. எங்களின் புகாரை மறைக்க அவர்களே தயார் செய்து கொடுத்த புகார்தான் இது. போலீசார் அழைத்தபோது போகாமல் இருந்துவிட்டு, இப்போது செல்கிறார்கள்.
ஏ.ஆர்.எஸ். கார்டனை பொழுதுபோக்கு விடுதியாக மாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். திருவனந்தபுரத்தில் ராதாவுக்கு ஸ்டார் ஓட்டல்கள், பங்களா வீடு என பல ஆயிரம் கோடி சொத்து உள்ளது. அதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் எங்களுக்கும் உரிய சொத்தில் ஏன் இவ்வாறு செய்கிறார்?. எங்கள் அம்மா நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே எண்ணினார். ராதாதான் என்னுடைய நல்ல தோழி என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன். அவராக இதை செய்யவில்லை. அவரது கணவர் உள்ளிட்டோர் சொல்வதை கேட்டுக்கொண்டு அவர் இவ்வாறு நடக்கிறார்.
நான் திருடிவிட்டதாக சொன்னதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறு வயதிலிருந்து என் சகோதரிகளுக்காக நிறைய செய்துள்ளேன். ராதா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும். ஏ.ஆர்.எஸ். கார்டன் பெயர்ப்பலகை மாற்றப்பட்டதை நினைத்தால் எனக்கு தூக்கமே வரவில்லை. நெஞ்சு வலிப்பதை போல் உள்ளது. இவ்வாறு அவர் கண் கலங்கியபடி பேசினார்.