

சென்னையில் நடைபெற்ற ‘மண்டாடி’ இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறனுக்கு நடிகர் சூரி நன்றி தெரிவித்தார்.
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமானவர் சூரி. தொடர்ந்து ‘ஜில்லா’, ‘வேதாளம்’, ‘அண்ணாத்த’, ‘ரஜினிமுருகன்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன.
தற்போது மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பாடல்களை பொறுத்தவரை கடந்த ஜூலையில் வெளியான ‘மண்டாடி மண்டாடி’ முதல் பாடல் சூரி நடனம் கவனம் பெற்றது. இதையடுத்து சமீபத்தில் வெளியான ‘உசுரே நீதான் புள்ள...’ பாடல் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அண்மையில் வெளியான படத்தின் டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘மண்டாடி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர்கள் சூரி மற்றும் சுஹாஸ் இணைந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
இதில் நடிகர் சூரி பேசுகையில், “இங்கு எனக்கு வந்த கைதட்டும் விசிலும் எங்க அண்ணண் வெற்றிமாறனைதான் சேரும். நான் இதுவரை வந்ததற்கும், இதற்கு மேல் நான் போனாலும், அதற்கு காரணம் வெற்றிமாறன்தான். நீங்கள் போட்ட விதை தான் செடியாக முளைத்திருக்கிறது. இந்தப் படம் வெளியாகும்போது, ஜி.வி.பிரகாஷ் எந்த அளவுக்கு உழைத்திருக்கிறார் என்பது தெரியும்.
இந்தப் படத்தின் டைட்டில் பலருக்கும் புரியாமல் இருந்தது.படகு போட்டியின் போது படகில் இருக்கும் 6 பேரையும் வழிநடத்தி அழைத்துச் செல்பவர்தான் மண்டாடி. நான் சிறப்பாக ஆடியிருக்கிறேன் என்று கூறுகிறார்கள். அந்த புதிய வார்த்தை என்னை ஏதோ செய்கிறது. காலையில் கடலுக்கு சென்றால், மாலையில்தான் திரும்புவோம். அவர்கள் படத்துக்காக ரிஸ்க் எடுக்கவில்லை. ரிஸ்கையே படமாக எடுத்திருக்கிறார்கள்.இந்தப் படத்துக்காக பல போராட்டங்களை சந்தித்தோம். நடுக் கடலில் படப்பிடிப்பு நடத்தினோம். அதன் பலனாக படம் சிறப்பாக வந்துள்ளது. 2 மாதங்களாக கடலில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். படம் சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.