“ஜன நாயகன்” படம் ஆன்லைனில் கசிந்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழுபடமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
“ஜன நாயகன்” படம் ஆன்லைனில் கசிந்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்
Published on

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் ‘ஜன நாயகன்’ படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ‘ஜன நாயகன்’ படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையில், ‘ஜன நாயகன்’ முழு படமும் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இப்படம் இணையத்தில் வெளியானதற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். படக்காட்சிகளை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் ,இணையத்தில் கசிந்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திரையரங்கின் இருள் அகன்று திரை திறக்காத முன்பே, 'ஜனநாயகன்' என்ற படைப்பின் உயிரை பறித்து, அதை கள்ளத்தனமாக சமூக வலைத்தளங்களில் அறுத்தெறிந்து, அதன் வருங்காலத்தை காரிருளில் மூழ்கடித்த இந்த ஈனச் செயல், ஒரு சாதாரண சட்ட விதி மீறல் அல்ல… காலங்காலமாக மக்களை மகிழ்விக்கும் கலைக்கு எதிரான திட்டமிட்ட ஒரு வன்முறை.அந்த வன்முறை தான் ‘ஜனநாயகம்’ என்னும் இரையை விழுங்கியது. இது, கலையை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளர்களின் உழைப்புக்கு எதிரான கொடூர யுத்தம்… மனித மனச்சாட்சிக்கு எதிரான ஒரு நம்பிக்கை துரோகம். ஏனெனில் ஒரு திரைப்படம் என்பது சில மணித்துளிகள் கண்முன் ஓடும் கற்பனை கதையல்ல… அது ஆயிரம் கனவுகளின் கூட்டுத்தொகை.

ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் வியர்வை, உழைப்பு, பல குடும்பங்களின் வாழ்வாதாரம், ஒரு சமுதாயத்தின் உணர்வு அனைத்தும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதனால் திரைத்துறை என்பது வெறும் பொழுதுபோக்கு தொழில் அல்ல… அதை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கை வழியும், சிந்தனைகளை விதைத்து சமூக மாற்றங்களை உருவாக்கும் வலிமைமிக்க தளமும் ஆகும். அத்தகைய துறையை சுயலாபம், காழ்ப்புணர்ச்சி அல்லது பழிவாங்கும் மனநிலையால் களங்கப்படுத்த முயல்பவர்கள், சட்டத்தையும், சமூக நெறிகளையும் மீறுபவர்கள். இச்செயலை ஆற்றியவர்கள் எவராக இருப்பினும், அவர்களது அடையாளம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். சட்டம் அவர்களைத் தொட வேண்டும். நீதித்துறையின் தண்டனை அவர்களைத் தாக்க வேண்டும். அது ஒரு எடுத்துக்காட்டாக நிலைத்திருக்க வேண்டும்.

ஏனெனில் இது ஒரே ஒரு திரைப்படம் சார்ந்த குறை கூறல் அல்ல; இது ஒரு ஒட்டுமொத்த துறையின் மாண்புக்கே விடப்படும் அறைகூவல். இன்று “ஜனநாயகன்”… நாளை இன்னொரு படைப்பு… இப்படி ஒவ்வொரு முயற்சியும், உழைப்பும், முதலீடும், நம்பிக்கையும் களவாடப்பட்டால், இன்று கதை சொல்பவர்களே நாளை சோகக் கதையாக மாறிவிடுவர். இந்த சூழ்நிலையில், திரைத்துறையும் பொதுமக்களும் ஒன்றிணைந்து இப்படியான கசிவு மற்றும் திருட்டு போன்ற தவறான செயல்களைத் தடுப்பது காலத்தின் தேவையாகிறது. இது கலைக்கும், உழைப்புக்கும் நாம் தரும் அடிப்படை மரியாதையாகும். அதேபோல், திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும், கலைஞர்களும், தொழிலாளர்களும் இணைந்து இத்தகைய செயல்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம். இந்த முயற்சியில் தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையான ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம். இது ஒரு அறிக்கை மட்டும் அல்ல… ஒரு அழைப்பு. உணர்வுள்ள அனைவரும் “கலைக்காக, கலை காக்க, ஒன்றிணைந்து முன் வாருங்கள்” என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com