

டோக்கியோ,
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், 'ஆர்ஆர்ஆர்'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த வருடம் மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை வென்றது.
இந்நிலையில், ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்பதிவு கடந்த 13-ந் தேதி தொடங்கியது. தொடங்கிய ஒரு நிமிடத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
அதன்படி, நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள திரையரங்குகளில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் இயக்குநர் ராஜமவுலி தனது மனைவியுடன் பங்கேற்றார். மேலும் பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, 83 வயதுமூதாட்டி ஒருவர், ராஜமவுலிக்கு 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கினார். காரணமாக ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தன்னை சந்தோஷப்படுத்தியதாக கூறினார். ஓரிகமி கிரேன்கள், சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் அதிர்ஷ்டத்திற்காகவும் தனக்கு பிடித்தவர்களுக்கு வழங்கப்படுவது ஆகும்.
இதுகுறித்து ராஜமவுலி தனது எக்ஸ் தளத்தில்,"ஜப்பானில் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டமும், ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓரிகமி கிரேன்களை பரிசாக அளிக்கிறார்கள். 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த 83 வயது மூதாட்டி, ஓரிகமி கிரேனை பரிசாக அளித்து எங்களை ஆசீர்வதித்தார். இது விலைமதிப்பில்லாத பரிசு " என்று குறிப்பிட்டுள்ளார்.