

மும்பை,
மும்பை மிராரோடு, தகிசர் சாக்கி நாக்கா போன்ற பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து 'வாட்ஸ்-அப்', 'ஸ்னாப்சாட்' போன்ற சமூக வலை தளம் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக காஷிமிரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார், போதைப்பொருள் வாங்குவது போல சென்று கடத்தல்காரர்களுக்கு வலைவீசினர். இதன்படி, தகிசர் சாக்கி நாக்கா பகுதியில் உள்ள தாக்குர் மால் அருகே போதைப்பொருளை டெலிவரி செய்ய வந்த இந்தி நடிகர் ரோஹுல்லா மெஹ்தி மற்றும் அவரது கூட்டாளி காசிப் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 28 கிராம் எம்.டி. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரோஹுல்லா மெஹ்தி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புட்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் சினிமா வாய்ப்புகளுக்காக மும்பை கோரேகாவ் பகுதியில் தங்கி இருந்து வந்துள்ளார். நடிகர் ஷாகித் கபூருடன் 'தேவா' திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி, பல்வேறு பிரபல ஓ.டி.டி. வலைத்தொடர்களிலும் இவர் துணை நடிகராக நடித்துள்ளார். கைது செய்யப்பட்ட ரோஹுல்லா மெஹ்தியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.