

சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். அதேபோல் மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் பல கிலோமீட்டர் நடந்தே மருத்துவமனைக்கு சென்று சேர்ந்தார். இப்படி தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், பெண்களை ஏன் வெளியே அனுப்புகிறீர்கள் என்ற கேள்வியை நடிகர் எஸ்.வி.சேகர் எழுப்பியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், என் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை சோப்பு வேண்டுமென்று சொன்னால் கூட வெளியே போகவிடமாட்டேன் என்றும், சட்ட ஒழுங்கு சரியில்லை என சொல்கிறார்கள் அந்த பெண் ஏன் புதருக்கு பின்னால் போகணும் . புதருக்குள் போலீஸ் விளக்கு போட முடியுமா? என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். எஸ்.வி.சேகர் பேச்சுக்கு கடுமையான கண்டனம் வலுத்து வருகிறது. இந்த நிலையில், எஸ்.வி சேகர் கருத்துக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். சின்மயி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
விளாத்திகுளத்தில் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண், ஏன் ஒரு வனப்பகுதியில் புதர்களுக்குப் பின்னால் சென்றார் என்று எஸ்.வி. சேகர் கேட்பது போல் தெரிகிறது. போலீசாரால் அங்கு வந்து எல்லா இடங்களிலும் லைட் போட முடியாது. அந்தப் பெண், கழிவறைகள் மற்றும் குளியலறைகள் இல்லாத மக்கள் செய்வது போல, தனது இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில், இளம் பெண்களும் சிறுமிகளும் இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது வழக்கமாக நடக்கும் நிகழ்வாக உள்ளது. ஆனால், உடல் காயம் ஏற்படும் என்ற பயமின்றி, தாங்கள் விரும்பும் இடத்தில், விரும்பும் போதெல்லாம், பாதுகாப்பாக தங்கள் ஆடையின் ஜிப்பைக் கழற்றி சிறுநீர் கழிக்கக்கூடிய ஆண்களால் இதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது” என்று காட்டமாக கூறியுள்ளார்.
இதற்கிடையே, தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், சம்மந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் எஸ்.வி சேகர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.