10 ஆண்டுகளை நிறைவு செய்த “தனி ஒருவன்”: இசையமைப்பாளர் ஆதி பகிர்ந்த புகைப்படம்


10 ஆண்டுகளை  நிறைவு செய்த “தனி ஒருவன்”: இசையமைப்பாளர் ஆதி பகிர்ந்த புகைப்படம்
x

மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘தனி ஒருவன்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

சென்னை,

மோகன்ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி 'மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். தமிழ் இசை உலகில் ஹிப் ஹாப் இசையை முன்னெடுத்துச் சென்ற பிரபல இசைக் கலைஞர்களில் ஆதி - ஜீவா முக்கியமானவர்கள். 2005-ம் ஆண்டு ஆர்குட் சமூகதளம் மூலம் சந்தித்த இருவரும், இசையின் மீது காட்டிய ஆர்வத்தின் காரணமாக தமிழில் இசைக் குழுவை உருவாக்க முடிவு செய்தனர். அதுதான் 2010-ம் ஆண்டு "ஹிப் ஹாப் தமிழா" இசைக் குழு. 2015-ம் ஆண்டு ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன் என மூன்று படங்களுக்கும் இசை அமைத்து தங்களுக்கான இலக்கை நோக்கி பயணித்தனர்.

இந்தப் படங்களின் இசை வெகு மக்களால் கவரப்பட்டாலும் ‘தனி ஒருவன்’ படத்தின் இசை பெரும் கவனம் பெற்றது.

இந்த நிலையில், 2015-ம் ஆண்டு தனி ஒருவன் இயக்குநர் ராஜாவுடன் ஹிப்-ஹாப் குழு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இசையமைப்பாளரும், நடிகருமான ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளின் அதிகாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம். ராஜா அண்ணா, ஆதி, ஜீவா - நாமெல்லாம் ஒரே காரில் போயிடலாமா?' எனக் கேட்டது இன்றும் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது. எங்களுக்கு அப்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் உற்சாகம் நிறைந்த இதயம்! இந்த நாள் எங்கள் பயணத்தில் எப்போதும் சிறப்பானது” என்று உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்துள்ளார்.

1 More update

Next Story