

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி (வயது 72) கார் விபத்தில் உயிரிழந்தார். ஆர்.பி. சவுத்ரியின் திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
"அய்யகோ மெய்யாகவா
என்று அலறியது மனது
ஆர்.பி. சௌத்ரியின்
மறைவுச் செய்தி அறிந்ததும்
கலைத்துறையின் அமுதசுரபி
உடைந்துவிட்டதே என்று
உடைந்து போனேன்
நான் கவியாடிய
கலை வீடுகளுள் ஒன்று
சூப்பர் குட் பிலிம்ஸ்
துள்ளாத மனமும் துள்ளும்
நாட்டாமை, ஷாஜகான்,
ஆசை ஆசையாய், தித்திக்குதே,
கேப்டன், ஜில்லா போன்ற முத்திரைப்படங்களின்
முன்னணித் தயாரிப்பாளர்
சௌத்ரி
புதுமை விரும்பி;
இளம் இயக்குநர்களின்
நலம் விரும்பி
சாதிக்கப் பிறந்த
ஆதிக்க வாதி
அவர்
சாலைவிபத்தில் மறைந்ததில்
என் விலாஎலும்பு வலிக்கிறது
என் அருமை நண்பரை
இழந்துவிட்டேன்
அவர் கொடுத்த காசோலை
எதுவும் திரும்பியதில்லை.
அந்த வரிசையில்
அவரும் இப்போது
திரும்பப் போவதில்லை
அவரை இழந்து வாடும்
குடும்பத்திற்கும்
கலைத்துறைக்கும்
கலங்கிய கண்களோடு
இரங்கல் தெரிவிக்கிறேன்
உங்கள் கலைப் புகழ்
அழியாது சௌத்ரி
மரணம் உங்களுக்கு
மறைவு இல்லை"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.