மாபெரும் கதையின் இறுதி அத்தியாயம்... ‘டியூன்-3’ படத்தின் 2-வது டிரெய்லர் வெளியீடு

‘டியூன்-3’ படத்தின் 2-வது மற்றும் கடைசி டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
மாபெரும் கதையின் இறுதி அத்தியாயம்... ‘டியூன்-3’ படத்தின் 2-வது டிரெய்லர் வெளியீடு
Published on: 

வாஷிங்டன்,

‘டியூன்’ வரிசையில் 3-வது மற்றும் கடைசி பாகத்தை டெனிஸ் இயக்கியுள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பிராங்க் ஹெர்பர்ட் நாவல்

அமெரிக்க எழுத்தாளர் பிராங்க் ஹெர்பர்ட் எழுதிய அறிவியல் புனைக்கதை நாவல் ‘டியூன்’. 1965-ம் ஆண்டு வெளியான இந்த நாவலின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து 5 பாகங்களை பிராங்க் ஹெர்பர்ட் எழுதினார். இந்த நாவலை திரைப்படமாக எடுக்க பல இயக்குநர்கள் முயற்சி செய்தனர்.

‘டியூன்’ திரைப்படம்

1984-ம் ஆண்டு டேவிட் லின்ச் இந்த நாவலை திரைப்படமாக எடுத்தார். ஆனால் அந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அடுத்த பாகங்களை எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து 2021-ம் ஆண்டு இயக்குனர் டெனிஸ் வில்லென்யூ இயக்கத்தில் ‘டியூன்’ திரைப்படம் வெளியானது.

ஆஸ்கார் விருதுகள்

சுமார் 165 மில்லியன் டாலர் பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகம் முழுவதும் சுமார் 411 மில்லியன் டாலர் கலெக்‌ஷனை அள்ளியது. அதோடு 6 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து டெனிஸ் இயக்கத்தில் ‘டியூன்-2’ திரைப்படம் 2024-ம் ஆண்டு வெளியானது. அந்த படம் சுமார் 715 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியது.

‘டியூன்-3’

அதனை தொடர்ந்து, ‘டியூன்’ வரிசையில் 3-வது மற்றும் கடைசி பாகத்தை டெனிஸ் இயக்கியுள்ளார். அந்த படம் வரும் டிசம்பர் 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘டியூன்’ படத்தின் 3 பாகங்களுக்கும் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளார். இவர் இந்தியாவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அராக்கிஸ்

‘டியூன்’ படத்தின் கதை ‘அராக்கிஸ்’ என்ற பாலைவன கிரகத்தை மையமாக கொண்டுள்ளது. பூமியில் இயற்கை வளங்களுக்காக வல்லரசுகள் மோதிக் கொள்வது போல், ‘அராக்கிஸ்’ கிரகத்தில் கிடைக்கும் ‘ஸ்பைஸ்’ என்ற பொருளுக்காக விண்வெளியில் உள்ள பல கிரகங்களை ஆட்சி செய்யும் சாம்ராஜ்ஜியங்கள் மோதிக் கொள்கின்றனர்.

மாபெரும் போர்

புனைவு கதையாக இருந்தாலும், இதில் அரசியல், மதம், போர் என பல விவகாரங்கள் குறித்து எழுத்தாளர் பிராங்க் ஹெர்பர்ட் எழுதியுள்ளார். குறிப்பாக கண்மூடித்தனமான மத நம்பிக்கை குறித்து ‘டியூன்’ கதை விரிவாக எடுத்துரைக்கிறது. தங்களை மீட்க வந்த மீட்பர் என மக்களால் நம்பப்படும் ஒருவன், ஒரு மாபெரும் விண்வெளி போரில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறான் என்பதே ‘டியூன்’ கதையின் மையக்கரு ஆகும். இதன் அடிப்படையில் ‘டியூன்-3’ படத்தின் கதை நகரும் என்று கூறப்படுகிறது.

டிரெய்லர்

இந்த படத்தின் முதல் டிரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, தற்போது ‘டியூன்-3’ படத்தின் 2-வது மற்றும் கடைசி டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விண்வெளி சாம்ராஜ்ஜியங்களுக்கு இடையிலான போர், பிரம்மாண்டமான பாலைவன உயிரினம், அழுத்தமான உணர்வுப்பூர்வ காட்சிகள் என டிரெய்லரின் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com