காற்றில் கலந்த கானக்குயில்... மெலடி குயின்: ஆஷா போஸ்லேவின் வாழ்க்கை பயணம்

இவர் உலகத்திலேயே அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனை பெற்றுள்ளார்.
காற்றில் கலந்த கானக்குயில்... மெலடி குயின்: ஆஷா போஸ்லேவின் வாழ்க்கை பயணம்
Published on

மும்பை,

‘இந்தியாவின் இசைக்குயில்’ என்று புகழப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை ஆஷா போஸ்லே. இவரும் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படப் பின்னணிப் பாடகியாக வலம் வந்தார். கடந்த 11-ம் தேதி தீவிர சோர்வு மற்றும் மார்பகத் தொற்று காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி ஆஷா போஸ்லே நேற்று காலமானார். அவருக்கு வயது 92.

10 வயது முதலே இசை உலகில் பயணத்தை தொடங்கிய ஆஷா போஸ்லேவின் வாழ்க்கை பயணம் பற்றிய விவரங்கள் வருமாறு: 1943-ம் ஆண்டு மஜ்ஹாபால் என்ற மராத்தி திரைப்படத்தில் முதன்முதலாக சலா சலா நவ் பலா என்ற பாடல் பாடினார். தொடக்கத்தில் சாதாரணமாகப் பாடி வந்த ஆஷா போஸ்லே பின்னர் கஜல், பஜன், பாப் போன்ற அனைத்து இசை வடிவங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். தமிழில், செண்பகமே.., ஓ.. பட்டர் பிளை.. பட்டர்பிளை., செப்டம்பர் மாதம்... செப்டம்பர் மாதம்... சந்திரமுகி படத்தில் கொஞ்சநேரம் என பல காலத்தால் அழியாத பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தார். இவரை ‘மெலடி குயின்’ என்று அழைப்பார்கள்.

2 தேசிய விருது, பத்மவிபூஷண் விருது பெற்ற பின்னணி பாடகி. இந்தியாவில் இருந்து கிராமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர். பாடகர்களில் இதுவரை யாரும் சாதிக்காத வகையில் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இதற்காக கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளார். அதாவது உலகத்திலேயே அதிக பாடல்களை பாடியவர் என்ற சாதனை இது.

கடைசியாக தனது 91-வது வயதில் ஒரு பாடலை பாடினார். Gorillaz இசைக்குழுவின் ஒன்பதாவது ஆல்பமான The Mountain (Parvat)-ல் இடம்பெற்ற “The Shadowy Light” என்ற பாடலை பாடினார். தனது கடைசி காலம் வரை இசையை சுவாசித்து வந்த அந்த குரல் காற்றில் கரைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com