''லெனின்'' படத்தில் ஜகபதி பாபுவை நடிக்கவிடாமல் தடுத்த நாகார்ஜுனா...

நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, ''லெனின்'' படத்தின் மூலம் ரசிகர்களை கவர உள்ளார்.
சென்னை,
பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, ''லெனின்'' படத்தின் மூலம் ரசிகர்களை கவர உள்ளார். இந்தப் படத்தை வினரோ பாக்யமு விஷ்ணு கதா புகழ் முரளி கிஷோர் அப்புரு இயக்குகிறார். இதற்கிடையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜகபதி பாபு, லெனின் படத்தில் நாகார்ஜுனா தன்னை நடிக்கவிடாமல் தடுத்ததாக கூறினார்.
அவர் கூறுகையில், “அகிலின் லெனின் படத்தில் நடிக்க தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். ஆனால், நாகார்ஜுனாவுக்கு விருப்பம் இல்லை. அந்த கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதாலும், அது எங்கள் நட்பைப் பாதிக்கக்கூடும் என்பதாலும் நாகார்ஜுனா என்னை நடிக்கவிடவில்லை. அவரது இந்த செயல் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் தயாரிப்பாளர்களில் ஒருவர், அவர் அப்படிச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை” என்றார்.
இப்படத்தில் ஆரம்பத்தில், ஸ்ரீலீலா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் பின்னர் தேதி மோதல்கள் காரணமாக அவர் விலகியதாகவும், தற்போது பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை நாக வம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன, தமன் இசையமைக்கிறார்.






