திரைப்பட வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் - ஆர்.கே.செல்வமணி

செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.
திரைப்பட வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் - ஆர்.கே.செல்வமணி
Published on

திரைப்பட வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு தலையிட்டு பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

திரையரங்கில் படம் வெளியாகி 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், அப்படிச் செய்தால் படங்களின் வருவாய் பாதிக்கப்படும், ஏற்கெனவே நஷ்டத்தைச் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்து வந்தது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வார காலம் கழித்துதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான், அந்தந்தத் திரைப்படங்களைத் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் திரைப்படத் துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், திரைப்படத் துறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார். “தமிழ் திரைப்படத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்படும்போது. அதன் நேரடி பாதிப்பு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல; அதனை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும்தான். திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண வேண்டும். செப்டம்பர் 1 முதல் திரைப்பட பணிகள் நிறுத்தப்பட்டால் கடும் பாதிப்பு ஏற்படும். படப்படிப்பு நிறுத்தப்பட்டால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். தமிழக அரசு தலையிட்டு பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com