

சென்னை,
மலையாள நடிகர் டொவினோ தாமஸ், ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் “ டிராகன் ” திரைப்படத்தில் நடிப்பதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது இயக்கி வரும் இந்த படத்தில், ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரராக டோவினோ நடிப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டோவினோ தாமஸ், அந்த தகவல்களை மறுத்துள்ளார்.
மலையாள மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் பணிமுறைகள் மாறுபடுகின்றன என்றும், மலையாள திரைப்படங்கள் பொதுவாக குறைந்த நாட்களில் படமாக்கப்பட்டு முடிவடைகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இதுபோன்ற தெலுங்கு திரைப்படங்கள் ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் என்றும் கூறினார்.
மேலும், “ஒரு தெலுங்கு படத்துக்கு தேதிகளை ஒதுக்கினால், நான்கு மலையாள படங்களை நான் இழக்க நேரிடும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், “டிராகன்” திரைப்படத்தில் டோவினோ தாமஸ் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுவரை பரவிய அனைத்து வதந்திகளுக்கும் இதனால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.