"டிரெண்டிங்" திரை விமர்சனம்


டிரெண்டிங் திரை விமர்சனம்
x

சிவராஜ் இயக்கத்தில் கலையரசன் நடித்த ‘டிரெண்டிங்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

தம்பதியான கலையரசனும், பிரியாலயாவும் 'யூ-டியூப்'பில் வீடியோக்களைப் பதிவிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். ஆடம்பர வாழ்க்கையும் வாழ்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களது 'யூ-டியூப்' சேனல் முடங்கிப்போக, இடிவிழுந்தது போல உணருகிறார்கள். வீட்டுக்கு இ.எம்.ஐ. கொடுக்கக்கூட வழியின்றி தவிக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது? என்ற சூழலில், செல்போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொள்கிறார். 'நாங்கள் சொல்லும் டாஸ்க்கை முடித்தால் 7 நாட்களில் ரூ.2 கோடி கிடைக்கும்', என்கிறார்.

வீட்டுக்குள்ளேயே இருந்து விளையாடும் இந்த விளையாட்டில் பெரிய தொகை கிடைத்துவிட்டால், எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டி விடலாம் என்ற முனைப்பில் இருவரும் 'டாஸ்க்'கில் நுழைகிறார்கள். எதிர்பாராத திருப்பங்களையும், அதிர்ச்சிகளையும் எதிர்கொள்கிறார்கள். அதன்பின் என்ன ஆனது? அந்த மர்ம நபர் யார்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.

எதார்த்தமான நடிப்பைக் கொட்டி கவனம் ஈர்த்துள்ளார், கலையரசன். பல்வேறு பரிமாணங்களில் மேம்பட்ட நடிப்பை காட்டியுள்ளார். அழகான கதாநாயகியாக வரும் பிரியாலயா, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் கவர்கிறார். கணவர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக செய்யும் விஷயங்கள் பரபரப்பின் உச்சம்.

பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா உள்ளிட்டோரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. பிரேம்குமாரின் முடிவில் சோகம் எட்டிப்பார்க்கிறது.

பிரவீன்பாலு ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். இசையும் படத்துக்கு வலு சேர்த்துள்ளது. ரசிக்க, யோசிக்க வைக்கும் வசனங்கள், கதாபாத்திரங்களின் மெச்சத்தகுந்த நடிப்பு பலம். யூகிக்க முடியும் காட்சிகள் பலவீனம். 2 பேரை சுற்றியே கதை நகர்வது சலிப்பை உண்டாக்குகிறது.

உறவு சிக்கல்களுக்கு தீர்வு தரும் இக்கதையில், இணைய அடிமையாகி போனவர்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார், இயக்குனர் சிவராஜ். 'கிளைமேக்ஸ்' காட்சி, பணம் மனிதர்களை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு சாட்சி.

டிரெண்டிங் - எச்சரிக்கை.

1 More update

Next Story