

சென்னை,
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, மகேஷ் பாபுவுடனான தனது நீண்டகால நட்பு குறித்து பகிர்ந்துள்ளார்.
ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கிய திரிஷா, பின்னர் தனது கடின உழைப்பால் டாப் ஹீரோயினாக உயர்ந்தார். விக்ரம், அஜித், விஜய், நாகார்ஜுனா, பிரபாஸ், மகேஷ் பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், மகேஷ் பாபு குறித்த இவருடைய பழைய நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் திரிஷா கூறுகையில், "நானும் மகேஷ் பாபுவும் சென்னையில் லயோலா கல்லூரியில் தான் படித்தோம். நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படிக்கவில்லை என்றாலும், ஒரே காலகட்டத்தில் கல்லூரியில் இருந்ததால் பொதுவான நண்பர்கள் மூலம் எங்களுக்கு அறிமுகம் இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.
கல்லூரி காலத்தில் வெறும் 'ஹாய், பை' நண்பர்களாக இருந்த தாங்கள், பின்னாளில் திரையில் ஒரு வெற்றிகரமான ஜோடியாக மாறுவோம் என்று அப்போது நினைக்கவில்லை என்றும் அவர் பகிர்ந்துள்ளார். மகேஷ் பாபு - திரிஷா கூட்டணியில் வெளியான 'அத்தடு' (Athadu) திரைப்படம் தெலுங்கு சினிமாவில் ஒரு மைல்கல். இதனைத் தொடர்ந்து 'சைனிகுடு' படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்தது.