

மும்பை,
பாலிவுட் திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சல்மான் கான். இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'மாத்ருபூமி' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிந்த நிலையில், சென்சார் சான்று வாங்குவதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் 'பேட்டில் ஆப் கல்வான்' என தலைப்பு வைக்கப்பட்டது. பின்னர் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் 'மாத்ருபூமி' என தலைப்பு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, படத்தில் சர்ச்சைகளைத் தவிர்க்கும் விதமாக சீனாவை நேரடியாகக் குறிப்பிடும் காட்சிகளைக் குறைப்பது, மீண்டும் சில காட்சிகளைப் படமாக்குவது போன்ற மாற்றங்களை படக்குழு செய்தது.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து, சென்சார் சான்றிதழ் வாங்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தில் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து சென்சார் சான்று வழங்குவதை சிபிஎப்சி நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியானது. குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவத்தின் ஒப்புதலைப் பெறுவது அவசியம் என்பதால் இந்தத் தாமதம் நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், படக்குழு இதனை மறுத்துள்ளது. "சிபிஎப்சி-யிடம் படம் இன்னும் சமர்ப்பிக்கப்படவே இல்லை" என்று தெரிவித்துள்ளது. சிபிஎப்சி சான்றிதழ் வாங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் விதமாகத் திட்டமிடப்பட்டிருந்த படம் குறித்தபடி வெளியாகுமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் சல்மான் கான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.