

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். நகைச்சுவை கலந்த காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பாக, இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்த படம் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.
இதையடுத்து, பல்வேறு படங்களில் நடித்த உதயநிதி இறுதியாக ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார். அரசியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக மாறியது. மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்படம், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்துடன் சினிமாவில் இருந்து விலகிய உதயநிதி, அரசியலில் களம் கண்டார். 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான இவர், பின்பு தமிழகத்தின் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். பின்னர் தொடர்ந்து அரசியலில் பிசியாக இருந்துவந்த அவர், தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகியுள்ளார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக, அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்ட படங்களில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உதயநிதியின் மகன் இன்பநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.