

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த், ‘வித் லவ்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டுகளையும் பெற்றது.
தற்போது அபிஷன் ஜீவிந்த், அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த்தின் தந்தையாக நடிக்கிறார். மேலும், யோகலட்சுமி, கானா வினோத், ஷிவானி நாகராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
‘பிக்காசோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து படத்தின் அறிமுகக் காட்சிகள் அடங்கிய கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், ‘பிக்காசோ’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் (First Single) இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அபிஷன் ஜீவிந்த் மற்றும் சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் இப்படத்தின் முதல் பாடலைக் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.