டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் விஜய்யின் “ஜனநாயகன்”

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் விஜய்யின் “ஜனநாயகன்”
Published on

சென்னை,

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் டிக்கெட் முன்பதிவில் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த கடைசி படம் ‘ஜனநாயகன்’

தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,

முதலில் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம், சென்சார் பிரச்சினையால் தள்ளிப்போனது. பின்னர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், மீண்டும் சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தள்ளிப்போனது.

இணையத்தில் வெளியான ‘ஜனநாயகன்’

இந்த படம் திரையரங்களுக்கு வருவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இதுவரை 11க்கும் மேற்பட்டோரை தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம் இணையத்தில் கசிந்தது திரையுலகையோ அல்லது தயாரிப்பாளர்களையோ பாதிக்காது என்றும், மக்கள் ஒரு திரைப்படத்தைத் திரையரங்கில் பார்க்கவே விரும்புவார்கள் என்பதால், இதுபோன்ற கசிவுகள் திரையரங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதில்லை.

படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்

இதையடுத்து, சமீபத்தில் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஜூலை 23-ல் ரிலீஸ்

‘ஜனநாயகன்’ திரைப்படம் வருகிற 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் ஓட்ட நேரம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என்று கூறப்படுகிறது.

படத்தை சிறப்பாக கொண்டாட அமைச்சர் புஸ்சி ஆனந்த் அறிவுறுத்தல்

தமிழ்நாடு அமைச்சரும் தவெக கட்சியின் பொதுச் செயலாளருமான புஸ்சி ஆனந்த், கட்சித் தொண்டர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம், இப்படத்தின் வெளியீட்டை ஒரு "மாபெரும் திருவிழாவாக" கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். ரசிகர்களும் பொதுமக்களும் மிகுந்த உற்சாகத்துடன் படத்தைப் பார்ப்பதை உறுதிசெய்யும் வகையில், கட்சி வழிகாட்டுதல்களுக்கு இணங்க, படம் திரையிடப்படும் திரையரங்குகளை அலங்கரிப்பது குறித்து அவர் குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

முன்பதிவு தொடக்கம்

‘ஜனநாயகன்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் நேற்று தொடங்கியது. இதற்கு முன்னரே அண்டை மாநிலங்களில் முன்பதிவு தொடங்கியது. உலகளவில் கிட்டத்தட்ட 3,500 திரையரங்குகளில் இப்படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்கெட் முன்பதிவு

‘ஜனநாயகன்’ படத்திற்கான முன்பதிவு மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது. முன்பதிவு டிக்கெட் விற்பனை சில மணி நேரங்களிலேயே ரூ. 10.60 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே முதல் நாளில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்லானது.

ரூ.1,000 கோடி கிளப்பில் நுழைய வாய்ப்பு

விஜய்யின் முந்தைய படமான ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூலான ரூ.149 கோடி வசூலை ‘ஜனநாயகன்’ முறியடிக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இப்படம் ரூ.1,000 கோடி கிளப்பில் நுழைய வாய்ப்புள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com