ரஜினி - விஜய் குறித்த பேச்சுக்கு விஷ்ணு விஷால் மீண்டும் விளக்கம்

சமூக வலைதளங்களில் எழுந்து வரும் சர்ச்சை தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் விளக்கம் அளித்திருக்கிறார்.
ரஜினி - விஜய் குறித்த பேச்சுக்கு விஷ்ணு விஷால் மீண்டும் விளக்கம்

‘ரஜினியை மட்டும் ஏன் தலைவர் என்று கூப்பிட்டுவிட்டு, விஜய்யை பெயர் சொல்லி அழைத்தீர்கள்’ என்று ரசிகர்கள் என்னிடம் கேட்கிறார்கள். விஜய் சார் சொன்னதுபோல நெகட்டிவிட்டியை புறக்கணியுங்கள் என்று நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் விளக்கமளித்திருக்கிறார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஜூலை 3-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி ஒன்றில் பேசியிருந்தது சர்ச்சை கிளப்பி இருந்தது. அதில் அவர், “ ‘கட்டாகுஸ்தி 2’ பட நிகழ்வில் இன்டர்வியூவில் என்னிடம் ஒரு கமெண்ட் பற்றி கேட்டார்கள். அதற்கு விளக்கம் அளிக்கும்பொழுது ரஜினிகாந்த் சாரை எடுத்துக்காட்டாக கூறி பதில் அளித்தேன். யாரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாருக்கே ஒரு விளக்கம் தர வேண்டி இருக்கிறது அதுதான் வருத்தம் அளிக்கிறது. தலைவரே (ரஜினி) மைக்கை பிடித்துக்கொண்டு, ‘எனக்கும் விஜய்க்கும் ஒன்றும் இல்லை’ என விளக்கம் சொல்லும் நிலைமைதான் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் முதலில் யார் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்களோ அது உண்மையாக்கப்பட்டு விடுகிறது. அதற்கு நாம் பதிலளிக்கவில்லை என்றால் அதுவே உண்மையாகி விடுகிறது அனைவருக்கும் சுதந்திரம் எப்படி இருக்கிறதோ அதே சுதந்திரம் தான் நடிகர்களுக்கும் உள்ளது. அப்படி இருக்கும் பொழுது நடிகர்கள் நாங்கள் பேசினால் மட்டும் அது பெரிதாகி விடுகிறது அது ஏன்?” என்று கூறியிருந்தார்.

விஷ்ணு விஷாலின் இவ்வாறு பேசியதற்கு, "'எப்படி நீங்கள் ரஜினியை தலைவர் என்று சொல்லிவிட்டு, விஜய்யை மட்டும் பெயர் சொல்லி அழைக்கலாம்' என விஜய் ரசிகர்கள் சிலர் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் செய்தியார்கள் சந்திப்பில் இதற்கு விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்திருக்கிறார். “விஜய்யை பற்றி ரஜினி என்ன பேசிருக்கார் என்பதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். நிறைய பேர், ‘ரஜினியை மட்டும் ஏன் தலைவர் என்று கூப்பிட்டுவிட்டு, விஜய்யை பெயர் சொல்லி அழைத்தீர்கள்’ என்று ரசிகர்கள் என்னிடம் கேட்கிறார்கள். ரஜினி சார் விஜய்யை விஜய் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதைத்தானே நானும் சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு இருக்கிறது. யாரையும் கஷ்டப்படுத்த நான் அப்படி பேசவில்லை. சோஷியல் மீடியாக்களில் தென்படும் வன்மம் பற்றித்தான் பேசினேன். அதில் இருந்து நான் பின் வாங்கப்போவதில்லை. விஜய் சார் சொன்னதுபோல நெகட்டிவிட்டியை புறக்கணியுங்கள்” என்று மீண்டும் விளக்கமளித்திருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com