

விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்த திரிஷா சிம்புவுடன் இணைந்து விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்து மிகப்பெரிய கம்பேக் கொடுத்தார். விஜய் சேதுபதியுடன் 96 படமும் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது. மணிரத்னம் இயக்கத்தில் குந்தவையாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். மீண்டும் விஜய்யுடன் லியோ படத்தில் ஹீரோயினாக நடித்த திரிஷா, கோட் படத்தில் மட்ட பாடலுக்கு மஞ்சள் சேலை அணிந்து வந்து நடனமாடினார்.
நடிகை திரிஷா, நாய்கள் மீது அதீத பிரியம் கொண்டவர். படப்பிடிப்புகள் இல்லாத நேரங்களில் நாய்களுடனேயே தனது நேரத்தை அவர் செலவிடுவார். அவர் ஆசையாக வளர்த்து வந்த ஸோரோ என்ற நாய், 2024 கிறிஸ்துமஸ் நாளில் இறந்தது. இதனால் மிகவும் மன உளைச்சலுக்குள்ளான திரிஷா, அதனை சமூக ஊடகத்திலும் பகிர்ந்திருந்தார்.
அவருக்கு ஆறுதலாக குடும்பத்தில் மீண்டும் ஒரு நாய்க்குட்டி வந்ததாகவும், அதற்கு ‘இஸ்ஸி’ என்று பெயர் சூட்டிருப்பதாகவும் திரிஷா சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திரிஷா குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் பேசிய விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், “நான் இதுவரைக்கும் இந்த விஷயத்தை சொன்னதே இல்லை. இப்போது திரிஷாவிடம் இருக்கும் நாய், என்னுடைய 'டெடி' என்ற செல்ல நாயின் மகள்தான். அது பூடில் இன நாய். எனது மனைவியும், திரிஷாவும் நெருங்கிய தோழிகள். இரண்டு பேரும் அடிக்கடி நாய்கள் பற்றியே பேசிக்கொள்வார்கள். இதை நான் இப்போது ஷேர் செய்துவிட்டதால் திரிஷா இதற்கு கோபப்பட மாட்டார் என்று நம்புகிறேன்” என்றார்.