அமீர் முந்தைய ஆட்சியில் கோமாவில் இருந்தாரா?- இயக்குனர் பேரரசு

நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் நுழைந்து ஏழை மாணவர்களின் வாழ்க்கையை கெடுத்து விட கூடாது என்பதுதான் என் வேண்டுகோள் என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.
அமீர் முந்தைய ஆட்சியில் கோமாவில் இருந்தாரா?-  இயக்குனர் பேரரசு
Published on

இயக்குனர் பேரரசு நீட் எதிர்ப்பு போராட்டத்தில் இயக்குனர் அமீர் கடந்த திமு.க ஆட்சியில் அமைதியாக இருந்துவிட்டு தற்போது போராட்டம் நடத்த காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில், கடந்த 20-ந்தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது.

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதலை கண்டித்தும், நீட் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர் தற்போது போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சென்னை தியாகராய நகரில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், நடிகை ஆண்ட்ரியா, பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இயக்குனர் பேரரசு நீட் எதிர்ப்பு போராட்டத்தில் இயக்குனர் அமீர் கடந்த திமு.க ஆட்சியில் அமைதியாக இருந்துவிட்டு தற்போது போராட்டம் நடத்த காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குனர் பேரரசு நீட் எதிர்ப்பு போராட்டம் குறித்து “நீட் எதிர்ப்பு போராட்டம், டெல்லி ஆகட்டும், தமிழ்நாடு ஆகட்டும் இது முழுக்க முழுக்க மாணவர்கள் போராட்டமாக தெரியவில்லை. தமிழகத்தில் காலகாலமாக யார் பாரதிய ஜனதாவை எதிர்த்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் முன்னின்று போராட்டம் நடத்துகின்றனர். நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு மாணவரின் குரலாக இந்த போராட்டம் இல்லை. போராட்டத்தில் சாதிதான் பேசப்படவில்லை. மாணவர்கள் பிரச்சனை பேசப்படுகிறது. தகுதி அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

ஆசிரியர் பணிக்கு, துறைமுகம், ரெயில்வே போன்று ஒவ்வொரு பணிக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. அதுபோல் உயிரை காக்கக் கூடிய மருத்துவ துறைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அங்கு தகுதியானவர்கள் வந்தாக வேண்டும். இதற்கு முன்பு மருத்துவக் கல்லூரிகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இடம் இருக்கா? பணம் கொடுப்பவர்களுக்குதான் இடம்.

நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் நுழைந்து ஏழை மாணவர்களின் வாழ்க்கையை கெடுத்து விட கூடாது என்பதுதான் என் வேண்டுகோள். நீட் வினாத்தாள் வெளியானது தவறுதான். அந்த விஷயத்தை வெளியிட்டு நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்தது மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் மத்திய அரசு எடுத்துள்ளது.

கடந்த ஆட்சியின் போதே நீட் தேர்வு இருந்தது. இப்போது ஆட்சி மாறியதும் எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்குனர் அமீர் அன்று கோமாவில் இருந்தாரா? மீண்டும் நீட் தேர்வு நடத்தும் போது தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும். எனவே நீட் எதிர்ப்பு போராட்டம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் குறிப்பாக ஏழை மாணவர்களுக்கும் எதிரான போராட்டம். இது நீட்டுக்கு எதிரானது அல்ல. நாட்டுக்கு எதிரானது” என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com