

மும்பை,
பாலிவுட் நடிகர் அமீர்கானின் அண்ணன் மன்சூர் கானின் மகளும், நடிகையுமான செயின் மேரி கான், மும்பையில் நடைபெற்ற போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு, சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், காவல்துறையினர் தன்னைத் தாக்கியதாகக் கூறி, உடலில் ஏற்பட்ட காயங்களைக் காட்டும் வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில், ‘சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ்’ (CJP) அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் செயின் மேரி கான் பங்கேற்றார். அப்போது, அவரும் நடிகர் இம்ரான் கான் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டதாகவும், சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுவிக்கப்பட்ட பிறகு, காவல்துறையினர் தன்னைத் தாக்கியதாக செயின் மேரி கான் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது கைகள், விரல்கள் மற்றும் கால்களில் ஏற்பட்ட காயங்களைக் காட்டும் வீடியோ ஒன்றையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “எங்களுக்கு எந்தப் பயமும் இல்லாத அளவுக்கு எங்களை அளவுக்கு அதிகமாகப் பயமுறுத்தாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செயின் மேரி கானின் இந்தக் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், காவல்துறையினர் தாக்கியதாக அவர் கூறிய புகார் தொடர்பான முழுமையான விவரங்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.