‘சல்மான்கானை புகழ்ந்து பேசியதற்காக டைகர் ஷெராப்பை கொல்ல முயன்றோம்’ - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

சல்மான்கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்து வருகிறது.
‘சல்மான்கானை புகழ்ந்து பேசியதற்காக டைகர் ஷெராப்பை கொல்ல முயன்றோம்’ - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
Published on: 

மும்பை,

பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பை ஜூகுவில் உள்ள கால்பந்து மைதானத்தில் பயிற்சி முடிந்து வெளியே வந்தார். அப்போது அவரது கார் மீது 3 பேர் கும்பல் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் டைகர் ஷெராப் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவரது டிரைவர் உள்பட 2 பேர் குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.

டைகர் ஷெராப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்று உள்ளது. எனவே இந்த வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த தாதா அனில் பண்டித் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் போலீசார் டைகர் ஷெராப் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.

சல்மான்கானை புகழ்ந்ததால்...

இந்தநிலையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் கைதான பூல் சிங்கிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. கடந்த 2022-ம் ஆண்டு டைகர் ஷெராப் நடித்த 'ஹீரோபந்தி-2' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அப்போது வழக்கமாக ரம்ஜான் நேரத்தில் சல்மான்கான் திரைப்படம் வெளியாவது குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் டைகர் ஷெராப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இந்தி திரையுலகில் ஒரே ஒரு புலி தான். அது சல்மான்கான். அவரின் முன் நான் பூனைதான்" என கூறியிருந்தார்.

சல்மான்கானை புகழ்ந்து பேசியதற்காக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று அனில் பண்டித் தன்னிடம் கூறியதாக கைதான பூல் சிங் போலீசில் கூறியுள்ளார். பூல் சிங் கின் வாக்குமூலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு ஜோத்பூரில் பிஷ்னோய் சமூக மக்கள் புனித விலங்காக கருதும் சிங்காரா மானை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார்.

இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான்கான் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. சல்மான்கானுக்கு நெருக்கமான முன்னாள் மந்திரி பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2 துப்பாக்கிகள் பறிமுதல்

இதற்கிடையே போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் மூலம் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 2 துப்பாக்கிகள், 10 தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் டைகர் ஷெராப் கார் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com