

சென்னை,
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்
தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு ‘ஜனநாயகன்’ படம் வெளியாகியுள்ளதால் டைட்டில் கார்டில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்” என வெளியானது. இதில், அவர் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்த சைகையும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், முதல் காட்சியில் கண்டு ரசிக்க பல திரைப் பிரபலங்களும் விஜய்யின் ரசிகர்களும் திரையரங்குகளில் இன்று காலையே குவிந்தனர்.
விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ என்பதாலும் பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி படம் வெளியாவதாலும் திரையரங்குகளில் ரசிகர்கள் பலர் மிகுந்த ஆவலுடன் படத்தை கண்டு ரசித்தனர். இந்த படத்தை தவெக அமைச்சர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துள்ளனர்.
தமிழகத்தில் காலை 9 மணி முதல் ‘ஜனநாயகன்’ திரையிடப்பட்டு வரும் நிலையில் சுமார் 11 மணியளவில் நடிகை திரிஷா, தோழிகளுடன் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு வருகை தந்துள்ளார். திரையரங்கில் திரிஷாவைப் பார்த்ததும், ‘ஜனநாயகன்’ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பிய நிலையில், எதற்கும் பதிலளிக்காமல் திரிஷா திரையரங்குக்குள் சென்றுவிட்டார்.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். படம் குறித்து பேசிய அவர், “படத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தோம். படம் மிகவும் நன்றாக இருந்தது. இது அவருடைய கடைசிப் படம் என்பது வருத்தமளிக்கிறது. நாம் அவரை மிஸ் செய்யப் போகிறோம்” என தெரிவித்தார்.
சமீபத்தில் நடிகை திரிஷாவின் தாயார் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.