

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இந்த படத்தினை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 4ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எதிர்பார்த்தி ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இதற்கிடையில், இந்த படத்தின் டிரெய்லர், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தன.
விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ள இப்படத்தை ஈஷான் சக்சேனா இணை தயாரிப்பு செய்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் ராம் சரண் கூறும்போது, “இந்தப் படத்தை முடிக்க சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக உழைத்தோம். எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது.
ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்தின் மையத் தூண். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்குப் பெரிய உத்வேகமாக இருக்கிறது. சிவ ராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும். இந்தப் படத்தை வெறும் ஒரு நடிகராகச் செய்யவில்லை. மனதார காதலித்துச் செய்தேன்” என்றார்.