

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனிடையே, ரவி மோகனின் வாழ்க்கையில் பின்னணி பாடகி கெனிஷா முக்கிய நபராக மாறினார். ரவி மோகன், ஆர்த்தி பிரச்சினைக்குக் காரணம் கெனிஷாதான் என்று சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த விவகாரத்தில் விமர்சிப்போருக்கு அவ்வப்போது கெனிஷாவும் பதிலடி கொடுத்து வந்தார். இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில், ஆர்த்திக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்து, பின்னர் ரவி மோகனிடமிருந்தும் சென்னையிலிருந்தும் விலகிச் செல்கிறேன் என்று நேற்று இரவு கெனிஷா அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து இன்று பேட்டி அளித்த ரவி மோகன், கடந்த 2 ஆண்டுகளாக அமைதியாக இருந்தேன். இனி அப்படி இருக்கமுடியாது. என்னை பற்றிய விமர்சனங்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இனி என்னை சீண்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.
எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நான் இனிமேல் நடிக்கப் போவது கிடையாது. என் படங்கள் திரைக்கு வராது. ஏனெனில் என்னால் நிம்மதியாக நடிக்க முடியவில்லை. அவமானங்களையும், வலிகளையும் இனியும் என்னால் தாங்க முடியவில்லை. என்றைக்கு எனக்கு விவாகரத்து கிடைக்கிறதோ, என்றைக்கு என் பிரச்சினைகள் சரியாகிறதோ, என்றைக்கு 'சைபர் புல்லிங்' என்ற தனிமனித தாக்குதல் போகிறதோ அன்றைக்கு நான் படம் நடிப்பேன். கைவசம் உள்ள படங்களை மிகவும் சிரமத்துக்கும், மனப் போராட்டத்துக்கும் இடையேதான் நடித்துக் கொடுத்து வருகிறேன்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ரவி மோகன் குற்றச்சாட்டை மறுத்து ஆர்த்தியின் தாயார் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ஒன்றரை வருடமாக நீதிமன்றத்தில் இருக்கும் விஷயத்தை இன்று ரவி மோகன் பேசி உள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்யாததால், அழ மாட்டேன், எமோஷனல் ஆக மாட்டேன். ரவியின் பேச்சால் குழந்தைகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ரவி மோகனுக்கு என்ன மன உளைச்சல் என்று தெரியவில்லை. குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறுவது பொய். என்மீதான அவதூறுகளுக்கு நான் நிச்சயம் பதில் சொல்வேன் திருமணமான பிறகு ஒரே வங்கி கணக்கு வைத்திருப்பது தவறில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுவரை நான் இதுபற்றி பேசியதில்லை. எல்லா பெற்றோரும் குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள்”என்றார்.