’தனி ஒருவன் 2' எப்போது தொடங்கும்?- இயக்குனர் கொடுத்த அப்டேட்!


’தனி ஒருவன் 2 எப்போது தொடங்கும்?- இயக்குனர் கொடுத்த அப்டேட்!
x

விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ராஜா 'தனி ஒருவன் 2' படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

சென்னை,

மோகன்ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'தனி ஒருவன்'. இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமான 'தனி ஒருவன் 2' படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை 2023-ல் வெளியிட்டது. ஆனால் அதற்கு பின்னர் தனி ஒருவன் 2 தொடர்பான எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ராஜா 'தனி ஒருவன் 2' படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, "சில நாட்களுக்கு முன்புகூட இதற்கான மீட்டிங் அர்ச்சனா கல்பாத்தியுடன் நடந்தது. அவர் இந்தக் கதையை கேட்டதும், ’இது சரியான நேரம் இல்லை’ எனக் கூறினார். நான் அவரிடம் `நீங்கள் நான் சொன்ன கதையைத்தானே கேட்டீர்கள்?' என்றேன். ’இந்தக் கதைக்கு அவ்வளவு செலவாகுமா’ எனக் கேட்டேன். ’இல்லை, நீங்க சாதாரணமான கதை சொல்லவில்லை. மேலும் இது சரியான நேரம் இல்லை. இது கண்டிப்பாக நடக்கும், ஆனால் கொஞ்சம் சினிமா துறையின் நிலை மேம்படட்டும்’ என்றார். நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். நாம் நினைத்ததுபோல விரைவில் நடக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நடக்கும்" என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story