

சென்னை,
தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இணைந்து வழங்கும் "யார் பொறுப்பு.?" (Who is responsible) என்ற விழிப்புணர்வு படத்தின் போஸ்டரை திரைப்பட நடிகர், ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வெளியீடு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு படத்தின் இயக்குனர் அருந்ததி அரசு, துணை ஒளிப்பதிவாளர் ராஜசேகர், உதவி இயக்குநர் மாரிமுத்து, திரைக் கலைஞர் ஜோதி லெட்சுமி, உதவி இயக்குநர் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு படம் குறித்து கேட்டபோது, இயக்குநர் அருந்ததி அரசு கூறியதாவது:
ஒரு இளைஞன் விலை உயர்ந்த பைக் வாங்கிக் கொடுக்க பெற்றோரிடம் பிடிவாதம் பிடிக்கிறான். குடும்ப சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல், தற்கொலை மிரட்டல் மூலம் தனது விருப்பத்தை நிறைவேற்றுகிறான். சமூக வலைதளங்களின் தாக்கத்தில், அதிவேகமாக பைக்கை ஓட்டி விபத்தில் சிக்குகிறான். அந்த ஒரு தவறான முடிவு, அவன் வாழ்க்கையையும், நண்பனின் வாழ்க்கையையும், மேலும் இரண்டு குடும்பங்களின் எதிர்காலத்தையும் சிதைக்கிறது. ஒரு நொடியில் எடுக்கப்படும் தவறான முடிவு, பல உயிர்களின் வாழ்வையும் மாற்றிவிடும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த விழிப்புணர்வு படத்தை எடுத்துள்ளேன்.
"யார் பொறுப்பு.?" (Who is responsible) என்ற விழிப்புணர்வு குறும்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி கேரளாவில் நடைபெறும் 2வது LK சர்வதேச குறும்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. மேலும் திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோரும் யார் பொறுப்பு.? விழிப்புணர்வு குறும்படத்தின் போஸ்டரை வெளியீடு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.