

‘ஜன நாயகன்’ லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த இயக்குனர் வினோத் பதிலளித்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,
தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3,500 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது.
இந்த படம் திரையரங்களுக்கு வருவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இதுவரை 11க்கும் மேற்பட்டோரை தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம் இணையத்தில் கசிந்தது திரையுலகையோ அல்லது தயாரிப்பாளர்களையோ பாதிக்காது என்றும், மக்கள் ஒரு திரைப்படத்தைத் திரையரங்கில் பார்க்கவே விரும்புவார்கள் என்பதால், இதுபோன்ற கசிவுகள் திரையரங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதில்லை.
இதையடுத்து, சமீபத்தில் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கேவிஎன் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் எச்.வினோத் பேட்டி அளித்துள்ளார். அதில் “சென்சாரில் பல விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால், ஆதாரம் இல்லாததால் வெளிப்படையாகப் பேச முடியவில்லை. அரசியல் லாபத்துக்காக எங்கள் மீது பழி போட்டார்கள். படத்துக்குப் பிரச்னை வரும், தயாரிப்பாளரும், ஹீரோவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தார்கள்” என்றார்.
பொய் செய்திகள் மற்றும் வதந்திகள் குறித்த கேள்விக்கு இயக்குநர் எச்.வினோத் “பொய்களை உற்பத்தி செய்வதில் இந்தியா நம்பர் 1 ஆக இருக்கிறது.. தேசத்தின் வளர்ச்சிக்கு இது ஆபத்தாக இருக்கும். உலகத்தில் அவனவன் என்னென்ன உற்பத்தி பண்ணிட்டு இருக்கான், நாம ஏராளமான பொய்களை உற்பத்தி பண்ணிட்டு இருக்கோம். வரலாற்றை வைத்து பொய், சாதியை வைத்து பொய், மதங்களை வைத்து பொய்.. இந்த பொய்கள் ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. இவனால தான் நாம் ஜெயிக்கல, இவனாலதான் எல்லாத்தையும் இழந்தோம் என்ற பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்குகிறது. பொய் ஒரு மனிதனை முட்டாள் ஆக்குகிறது முட்டாள்களிடம் எந்த பதிலும் இருக்காது. திரும்ப திரும்ப கேட்டால் அவனுக்கு கோபம் வந்துவிடும் வன்முறைக்குள் போவான்” என்றார்.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வை குறித்த கேள்விக்கு “பணம் வாங்காமல் மக்கள் வாக்களிப்பது பெரிய ஆச்சரியம்.. விஜய் அரசியலுக்கு வந்த பின், பொதுமக்கள் இதுவரை இருந்த அரசியல் கணிப்புகளை முற்றிலுமாக மாற்றி எழுதியுள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து ‘ஜன நாயகன்’ லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த இயக்குனர் வினோத், “இப்போ இது பெரிய பிரச்னையா? நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது. இதற்கு ஏன் விஜய் டுவீட் போட்டுக்கொண்டு இருக்கிறார் எனப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அதனால், இது ஒரு சட்டப் பிரச்னை. அது தொடர்பான முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.