

சென்னை,
‘அரசன்’ படத்தின் 8 நிமிட சிறப்புப் புரோமோவுக்கான பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், அதற்கு பின்னணி இசை சேர்க்கும் பணிகள் மட்டும் நிலுவையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் (எஸ்.டி.ஆர்.) நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தீபாவளி பண்டிகையையொட்டி ‘அரசன்’ படத்திலிருந்து சுமார் 8 நிமிடங்கள் கொண்ட சிறப்புப் புரோமோ காட்சிகள் வெளியாகும் எனத் தகவல்கள் பரவின. ‘தி வேர்ல்டு ஆஃப் அரசன்’ (The World of Arasan) என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்தப் புரோமோவில் கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் படத்தின் முக்கிய காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ‘அரசன்’ படத்தின் 8 நிமிட சிறப்புப் புரோமோவுக்கான பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், அதற்கு பின்னணி இசை சேர்க்கும் பணிகள் மட்டும் நிலுவையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் தனது திருமணம் தொடர்பான பணிகளில் மும்முரமாக இருப்பதால், புரோமோவுக்கான பின்னணி இசையை உடனடியாக வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னணி இசைப் பணிகள் முடிந்ததும் புரோமோவைத் தணிக்கைக்கு அனுப்ப வேண்டும். தணிக்கைச் சான்றிதழ் கிடைத்த பிறகே திரையரங்குகளுக்கு அதன் பிரதிகளை வழங்க முடியும். இதனால் தீபாவளியன்று புரோமோ வெளியாவது சாத்தியமில்லை என்றும், டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தீபாவளிக்கு ‘அரசன்’ படத்தின் சிறப்புப் புரோமோவை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனினும், இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.