தொடர் வெற்றியை தக்கவைப்பாரா ‘பகவந்த் கேசரி’ பட இயக்குநர்

சிரஞ்சீவி, நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படம் நாளை வெளியாகிறது.
தொடர் வெற்றியை தக்கவைப்பாரா ‘பகவந்த் கேசரி’ பட இயக்குநர்
Published on

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற தெலுங்கு திரைப்படம், சங்கராந்திக்கு வஸ்துன்னாம். அங்கு முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் வெங்கடேஷ் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். நகைச்சுவைக்கும், அதிரடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து ரூ.50 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரூ.300 கோடியை வசூலித்தது.

இந்தப் பெரும் வெற்றியைத் தொடர்ந்து அனில் ரவிபுடி இயக்கியிருக்கும் திரைப்படம், மன சங்கர வர பிரசாந்த் காரு. இந்தப் படமும் நகைச்சுவை, குடும்ப செண்டிமென்ட், அதிரடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நயன்தாராவும், இரண்டாவது நாயகியாக கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சிரஞ்சீவி, ரா உளவுப்பிரிவு அதிகாரியாக நடித்துள்ளார். வேலை நிமித்தமாக வீரம் காட்டி நிற்கும் ஒரு நாயகன், தன் குடும்பத்திற்காக மனைவியிடம் மண்டியிட்டு நிற்பதை கதைக்களமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது என்பது, டிரெய்லரைப் பார்க்கும்போது தெரிகிறது.

2015-ம் ஆண்டு பட்டாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், அனில் ரவிபுடி. இவர் தொடர்ச்சியாக சுப்ரீம், ராஜா தி கிரேட், பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன் 2, சரிலேரு நீக்கெவரு, பன் அண்ட் பிரஸ்ட்ரேஷன் 3, பகவந்த் கேசரி, சங்கராந்திக்கு வஸ்துன்னாம் என்று 8 படங்களை இயக்கியிருக்கிறார்.

இவை அனைத்துமே குறைந்த செலவில் உருவாகி, அதிக வசூலுடன் வெற்றிபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ஒன்பதாவது படமாக மன சங்கர வர பிரசாந்த் காரு வெளியாக இருக்கிறது. அனில் ரவிபுடி இயக்கத்தில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் இது. இதன் மொத்தச் செலவு ரூ.200 கோடி ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக கமர்ஷியல் மற்றும் அதிரடி திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த சிரஞ்சீவி, மன சங்கர வர பிரசாந்த் காரு படத்தின் மூலமாக குடும்பங்களைக் கவரும் வகையிலான கதைக்களத்திற்கு திரும்பியிருக்கிறார். சிரஞ்சீவியின் புகழுடன், அனில் ரவிபுடியின் நகைச்சுவையும், திரைக்கதை அமைப்பும் இணைந்திருப்பதால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களின் கணிப்பாக இருக்கிறது. அனில் ரவிபுடி இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்து படங்களிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட அந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியையும் பதிவு செய்திருக்கின்றன. அதுவும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற சங்கராந்திக்கு வஸ்துன்னாம் படத்தைப் போலவே, அனில் ரவிபுடியின் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள மன சங்கர வர பிரசாந்த் காரு திரைப்படமும் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்யும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com