

"பூ" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி திருவோத்து. கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான "தங்கலான்" படத்தில் தனது வலுவான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பயணத்தில் தமிழில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும், மலையாளத்தில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்வு செய்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
சினிமா மட்டுமின்றி, திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பார்வதி, தற்போது பெண்களின் நிலைமை குறித்து பேசிய கருத்துகள் திரையுலகில் கவனம் பெற்றுள்ளன.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “நாம் எல்லாவற்றையும் சரியாகச் செய்து, சிறந்த நடிப்பைக் கொடுத்து, நம் படங்கள் சூப்பர் ஹிட்டானால், நம் திறமைக்குத்தான் இங்கு மதிப்பு கிடைக்கும் என்று நான் உண்மையாகவே நினைத்தேன். என்னால் நடிப்பும், பாக்ஸ் ஆபீஸ் வெற்றியும் இரண்டையும் தர முடிகிறது. அப்படியிருந்தும் நான் ஏன் திரையுலகில் ஓரங்கட்டப்படுகிறேன் என்று எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன்” என்றார்.
மேலும், “அப்போதுதான் எனக்குப் புரிந்தது; இந்த சினிமா சிஸ்டத்தைப் பொறுத்தவரை பெண்கள் எப்போதுமே ‘தேவையற்றவர்கள்’ என்பதுதான் அடிப்படை விதி. நீங்கள் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், எவ்வளவு பணம் சம்பாதித்துக் கொடுத்தாலும், நீங்கள் பேசும் உண்மைகள் அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தினால், உங்களை எளிதாகத் தூக்கி எறிந்துவிடுவார்கள்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.