

நடிகர்கள் ரசிகர்களை சந்தித்தாலே அரசியலுக்கு வருவதற்கா என்று தான் கேட்கிறார்கள் என்று நடிகர் ரவி மோகன் கூறியுள்ளார்.
‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் மூலம் ரவி மோகன் இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரவி மோகன் இப்போது விதவிதமான ஜானர்களில் நடித்து வருகிறார். பேன்டஸியா ‘ஜீனி’, அரசியல் ஜானராக ‘கராத்தே பாபு’, ‘மிருதன் 2’ , கலகலப்பான ‘ப்ரோ கோட்’ என அடுத்தடுத்து அசத்தலான லைன் அப்களை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் ரவி மோகன் சென்னை மேடவாக்கத்தில் உள்ள ஒரு அரங்கத்தில் அகில இந்திய ரவி மோகன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் செப்டம்பர் 10ம் தேதி அவருக்கு 46வது பிறந்தநாள். இதை முன்னிட்டு அவர் ரசிகர்களை சந்தித்து, கேக் வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் ரவி மோகன் கலந்து கொண்டு குழந்தைகளுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறகு மேடைக்கு நடுவில் உட்கார்ந்து மைக்கில் நிர்வாகிகள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார். அபோது ஒரு நிர்வாகி, “அண்ணா, அழைப்பிதழ் கொடுங்கள், தமிழகத்தில் இருந்து அலையாய் வருவோம். கொடியை கொடுங்கள் உங்கள் ரசிகர்கள் கோட்டையை பிடிப்போம்” என்றார்.
அரசியல் வருகை தொடர்பாக பேசிய ரவி மோகன், “நடிகர்கள் ரசிகர்களை சந்தித்தாலே அரசியலுக்கு வருவதற்கா என்று தான் கேட்கிறார்கள். ஆனால் அது ஒரு தனிப்பட்ட முடிவு. இப்போது நான் சினிமாவில் இருக்கிறேன். சினிமாவில் இருக்கும் வரையில் எந்த சார்பாகவும் பேசவே முடியாது. அதுதான் யதார்த்தம். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை சினிமா மட்டும் தான் சாதி, மதம், பேதம் இல்லாமல் இருக்கும் ஒரு துறை. தியேட்டர் உள்ளே கோயில், சர்ச், மசூதி மாதிரி எல்லா மக்களும் உணர்வால் ஒன்றிணைகிறார்கள். அதைத்தான் கோமாளி படத்திலும் காண்பித்திருப்போம். நல்லது செய்ய பதவி தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம். பதவி இருந்தால் இன்னும் உதவி பண்ணலாம். ஆனால் அது இல்லாமலும் பண்ணலாம்” என்றார்.