

சென்னை,
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அங்கீகாரம்'. இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜே.பி. தென்பாதியான், தடகள வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் மூலம் 'அறம்', 'அயலான்' உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒடுக்கப்பட்ட பின்னணியிலுள்ள ஒரு தடகள வீரர், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பொங்கி, தனக்கான அங்கீகாரத்துக்காக நடத்தும் போராட்டமே கதை.
சென்னையில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நாயகன் கே.ஜே.ராஜேஷ், தடகளத்தில் பல சாதனைகள் புரிந்து முன்னேறுகிறார். இதற்கிடையில் காமன்வெல்த் போட்டியில் அவரது பெயர் நிராகரிக்கப்படுகிறது.
எல்லா தகுதிகளும் இருந்தும், சில சூழ்ச்சிகளால் அவரை புறக்கணிக்கிறது விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். இதற்கு விளையாட்டு அமைச்சர் மன்சூர் அலிகானும் உடந்தையாக இருக்கிறார்.
இதையடுத்து நீதி கேட்டு நீதிமன்றம் செல்லும் அவரை பிரச்சினைகள் சுழன்று அடிக்கிறது. அவரது உயிரை பறிக்கவும் முயற்சிகள் நடக்கிறது.
இதனை ராஜேஷ் எப்படி சமாளித்தார்? அவருக்கான நியாயம் கிடைத்ததா? என்பது மீதி கதை.
பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கும் கே.ஜே.ராஜேஷ், முடிந்தவரை தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார். அவரது கட்டுக்கோப்பான உடற்கட்டும் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறது. அவரது கோச் ஆக வரும் வசுந்தரா அழுத்தமான நடிப்பால் கவர்கிறார்.
விஜி வெங்கடேஷ், மன்சூர் அலிகான் உள்பட அனைவரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் அழுத்தம். ஒளிப்பதிவில் படத்துக்கு பலம் சேர்த்துள்ளார் விஸ்வநாத்.
அழுத்தமான காட்சிகள் படத்துக்கு பலம். பல காட்சிகள் யூகிக்க வைக்கின்றன.
ஒரு ஒடுக்கப்பட்ட பின்னணி கொண்ட இளைஞன் திறமை இருந்தும் தனக்கான அங்கீகாரத்தைப் பெற எவ்வளவு போராட வேண்டியுள்ளது? என்பதை சமரசமின்றி படமாக காட்சிப்படுத்தியுள்ளார், இயக்குனர் தென்பாதியான். விளையாட்டு துறையில் நிலவும் உள்ளடி அரசியலை தைரியமாக சொன்னதற்கு பாராட்டலாம்.