சார்லஸ் எண்டர்பிரைசஸ்: சினிமா விமர்சனம்

கடவுள் மனிதனாக வந்து பலவிதங்களில் உதவியும், நன்மையையும் எந்த ரூபத்திலும் செய்யலாம் என்பதைச் சொல்லும் படம்.
சார்லஸ் எண்டர்பிரைசஸ்: சினிமா விமர்சனம்
Published on

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் பாலு வர்கீஸ். அவருடைய அப்பா குரு சோமசுந்தரமும் அம்மா ஊர்வசியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். பாலு வர்கீஸ் தனியார் காபி ஷாப்பில் வேலை செய்கிறார். மாலைக்கண் பிரச்சினை கொண்ட அவருக்கு திடீரென வேலை பறிபோகிறது.

இதனால் சொந்தமாக பிசினஸ் தொடங்க ஆசைப்படுகிறார். அத்துடன் தன் கண் பார்வைக்கு வெளிநாட்டில் சிகிச்சை தரப்படுகிறது என்பதை தெரிந்து கொள்கிறார். ஆனால் பணம் இல்லாமல் தவிக்கிறார். இந்த சூழ்நிலையில் அவருடைய வீட்டில் புராதான காலத்தைச் சேர்ந்த விநாயகர் சிலை இருப்பதை அறிந்து கொள்ளும் சிலை திருட்டு கும்பல் பாலுவுக்கு பணத்தாசை காட்டி சிலைக்கு விலை பேசுகிறது.

தன்னுடைய காலனியில் நடக்க இருக்கும் திருவிழா, கண்காணிப்பு கேமரா போன்ற தடைகளால் சிலையை கடத்த முடியாமல் தவிக்கும் பாலு, துணைக்கு தன் நண்பன் கலையரசனை அழைக்கிறார். நண்பர்களால் அந்த சிலையை கடத்த முடிந்ததா, பாலுவின் லட்சியம் நிறைவேறியதா என்பது மீதி கதை.

அம்மாவின் செல்லப்பிள்ளை வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் பாலு வர்கீஸ். தனக்கு இருக்கும் பிரச்சினை காரணமாக வெளிப்படுத்தும் குழந்தைத்தனமான நடிப்பு, அம்மா மீது காண்பிக்கும் அழுத்தமான பாசம் என தன்னுடைய பங்கை நிறைவாக செய்துள்ளார்.

கலையரசனுக்கு பிரதான வேடம். அவரும் அதை உணர்ந்து பிரமாதமாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அவரைப்பற்றி தெரியவரும் உண்மை படத்தின் சிறந்த பகுதி என சொல்லலாம். 

கடவுள் பக்தையாகவும் பாசமிகு அன்னையாகவும் வரும் ஊர்வசி நடிப்பில் நெகிழ வைக்கிறார். குரு சோமசுந்தரம் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காட்சிகள் மெதுவாக நகர்வது பலகீனம். சுப்பிரமணியன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதை சிலிர்க்க வைக்கும் அதிர்வுகளை உண்டாக்குகிறது.

ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு பலம். மென்மையான கதை கருவில் ஆன்மீகத்தை கலந்து ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com