குழந்தைகள் உலகம் - "மை டியர் பூதம் " சினிமா விமர்சனம்

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் ஆக உள்ளது மை டியர் பூதம். அவர்களின் உலகிற்கு சென்று அவர்கள் ரசிக்கும் விஷயங்களை பார்த்து பார்த்து காட்சிகளாக வைத்துள்ளார் இயக்குனர் ராகவன்.
குழந்தைகள் உலகம் - "மை டியர் பூதம் " சினிமா விமர்சனம்
Published on

திக்குவாய் சிறுவனும், பிரபுதேவா பூதமும் என்று ஒரே வரியில் சொல்லிவிடக்கூடிய கதை. முனிவர் கொடுத்த சாபத்தால் அதல பாதாள குகைக்குள் கல் சிலையாக முடங்கிக் கிடக்கிறது, ஒரு பூதம் (பிரபுதேவா). ஒரு நாய் துரத்தி வந்தபோது அந்த குகைக்குள் விழுந்து விடுகிறான், திக்குவாய் குரையுள்ள ஒரு சிறுவன். அந்த குகையின் அமைதி அவனை பயமுறுத்துகிறது. அப்போது அவன் கைக்கு ஒரு கல்பொம்மை கிடைக்கிறது. அதை சிறுவன் கையில் எடுத்ததும், பொம்மை பேச ஆரம்பிக்கிறது. முதலில் பூதத்தைப் பார்த்து பயப்படும் சிறுவன், நாளடைவில் அதனுடன் நெருக்கமாகி விடுகிறான். அவனுக்கு பூதம் சின்ன சின்ன சாகசங்களை செய்து காட்டி மகிழ்விக்கிறது. சரளமாக பேச ஆசைப்படும் அந்த சிறுவன், பள்ளியில் நடைபெறும் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்கிறான். பேசும்போது திக்குவாய் ஏற்பட்டால், தனக்கு பூதம் உதவும் என்ற நம்பிக்கையுடன் அவன் மேடை ஏறுகிறான். பேசும்போது அவனுக்கு திக்குவாய் ஏற்படுகிறது. சிறுவன் அழுகிறான். மேடையிலேயே நிற்கும் பூதம், அவனுக்கு உதவவில்லையே என்று ஆதங்கப்படுகிறான். அப்போது தனக்கு சில எல்லைகள் உள்ளன என்று அவனிடம் பூதம் விளக்குகிறது.

இந்த சமயத்தில், பூதம் பூமியில் வாழ்ந்ததற்கான காலம் முடிவடைகிறது. அந்த முடிவை ஏற்றுக்கொண்டு பூதம் வானுலகம் சென்றதா, இல்லையா? என்பது கிளைமாக்ஸ். பூதமாக பிரபுதேவா, வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளும் அவருடைய சுபாவமும், எப்போதும் சிரித்த முகமும் அந்த வேடத்துக்கு கைகொடுத்துள்ளன. மேடையில் சிறுவனின் பேச்சுப்போட்டிக்கு உதவ முடியவில்லையே என்று வருத்தப்படும்போதும், பூமியில் வாழ்வதற்கான காலம் முடிவடைந்ததை சிறுவனிடம் சொல்லும்போதும், பிரபுதேவா நெகிழ வைக்கிறார். சிறுவன் அஷ்வந்த், பொருத்தமான தேர்வு. கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து இருக்கிறான். இவனுக்கு அம்மாவாக ரம்யா நம்பீசன். தாய்ப்பாசத்தை மிக இயல்பாக முகத்தில் காட்டியிருக்கிறார்.

மாயஜால காட்சிகளை வியக்கும் வகையில் பதிவு செய்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார். டி.இமான் இசையமைத்துள்ளார். பாடல்களும், பின்னணி இசையும் வருடிக்கொடுக்கின்றன.

என்.ராகவன் டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. அதை பின்வரும் காட்சிகள் ஈடுசெய்யவில்லை. சாகச காட்சிகளை இன்னும் விரிவுபடுத்தி இருக்கலாம். விரசம், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், குடும்ப சகிதம் பார்க்க ஒரு சினிமா என்ற வகையில் ஆறுதல்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com