

கர்நாடகாவில் ஓட்டல் நடத்தி வரும் அர்ஜூன் தாஸ், தனது மனைவி அன்னாபென், மாமியார் வடிவுக்கரசி ஆகியோருடன் வசித்து வருகிறார். அன்னா பென்னின் அண்ணனான யோகிபாபுவும் இவர்களுடனேயே வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் அர்ஜூன் தாஸ் -அன்னா பென் தம்பதியினரின் மகன் திடீரென பள்ளியில் இருந்து மாயமாகி போகிறான். பள்ளியில் இருந்து சிறுவனை அழைத்துச்சென்ற மர்ம ஆசாமியை கண்காணிப்பு கேமராவில் பார்க்கும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைகிறார்கள்.
சிறுவன் வேண்டும் என்றால் ஒரு மிகப்பெரிய மோசடியை நீங்கள் அரங்கேற்ற வேண்டும் என்று மர்ம ஆசாமி கட்டளையிட அர்ஜூன் தாஸ் வெலவெலத்து போகிறார். அந்த மர்ம ஆசாமி யார்? அர்ஜூன் தாஸ் குடும்பத்தினர் அவரை பார்த்து ஏன் பயப்பட வேண்டும்? அவர்களின் பின்னணி தான் என்ன? இறுதியில் என்ன ஆனது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
எதார்த்த நடிப்பை காட்டி ரசிக்க வைக்கும் அர்ஜூன் தாஸ், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கை எவ்வளவு சுமையா னது? என்பதை கண்ணாடியாய் பிரதிபலித்துள்ளார். தாடியில்லாத அர் ஜூன் தாசை முதன்முறையாக ரசிகர்கள் பார்க்கலாம்.
அழகான சிரிப்பாலும், அளவான நடிப்பாலும் அன்னா பென் கவர்கிறார். ராதாரவி, வடிவுக்கரசி உள்ளிட்டோரின் அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது. யோகிபாபு, வி.டி.வி.கணேசின் டைமிங் காமெடிகள் ரசிக்க வைக்கிறது. சிறுவன் அகிலன் கதாபாத்திரம் திருப்பம். அருள்தாஸ், நந்தகோபால், ஷாஜி சென், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, சதானந்த் உள்ளிட் டோரின் நடிப்பிலும் நிறைவு.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டானின் இசையும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறது. புதுமையான கதைக்களம் படத்துக்கு பலம். முதல் பாதியில் விறுவிறுப்பு கொஞ்சம் 'மிஸ்சிங்'. சில இடங்களில் லாஜிக் மீறல் எட்டிப் பார்க்கிறது. பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து ஒரு செய்தியை யாருக்கும் தெரியாமல் பிரசுரிக்க செய்வது என்பது ரொம்பவே ஓவர்... அவ்வளவு எளிதாக நினைத்துவிட்டீர்களா? அழுத்தமான திரைக்கதையில் யூகிக்க முடியாத காட்சிகளை கொண்ட படைப்பாக படத்தை இயக்கி கவனம் ஈர்த்திருக்கிறார், அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ். இரண்டாம் பாகம் நிச்சயம்.
கான் சிட்டி - முடிவில்லா பயணம்.