

சென்னை,
ராஜஸ்தானில் ஓட்டல் நடத்தும் சனந்துடன் நட்பாகிறார், ஐ.டி. ஊழியரான இமயா. ஒருகட்டத்தில் சனந்திடம் காதலை சொல்லும் இமயாவுக்கு, அவரது முந்தைய காதலியான மடோனா செபஸ்டியனின் பிரிவு பற்றி தெரியவருகிறது. ஆனாலும் எல்லாவற்றையும் மறந்து, சனந்த் -இமயா காதலிக்க தொடங்குகிறார்கள். இருவீட்டாரும் நெருக்கமாக, திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
இதற்கிடையில் ஒரு விபத்தில் சிக்கும் சனந்த், இமயாவின் காதல் உள்பட சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை மறக்கிறார். முன்னாள் காதலி மடோனா செபஸ்டியனை தேடி ஊட்டிக்கு ஓடுகிறார். காதலனை குணப்படுத்த இமயா வேறு வழியின்றி மடோனா செபஸ்டியனிடம் உதவி கேட்கிறார். அப்போது பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி மூவரின் வாழ்க்கையையும் திருப்பி போடுகிறது. இறுதியில் என்ன ஆனது? யாருடைய காதல் வென்றது? என்பதே காதல் சொட்டும் மீதி கதை.
இதுவரை துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த சனந்த், கதாநாயகனாக மாறி ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். காதல், எமோஷனல் காட்சிகளில் அசத்தியும் உள்ளார். சுருள் முடி கோர்வையாய், மந்தாரப்பூ சிரிப்பாய் படம் முழுவதும் மனதில் பதிகிறார், இமயா. காதல், நகைச்சுவை தாண்டி முதல் படத்திலேயே 'எமோஷனல்' காட்சிகளிலும் கலக்கியிருக்கும் கதாநாயகி இமயா, தமிழ் சினிமாவுக்கு நல்வரவு. (இவர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் என்பது 'எக்ஸ்டிரா தகவல்)
அழகாலும், அளவான நடிப்பாலும் கவர்கிறார், மடோனா செபஸ்டியன். முறிந்த காதல் மீண்டும் முளைக்கும் இடத்தில் அவரது நடிப்பு ‘அடடா...'. வாட்ஸ்-அப் மணி, டெப்னிதா, உமா பத்மநாபன், பிரகதி என அனைவருமே நல்ல தேர்வு.
வி.முகேஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் 'கலர்புல்'. ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல் கள் 'யூத்புல்'. அழகான காதல் காட்சிகள் படத்துக்கு பலம். சில காட்சிகள் யூகிக்க முடிகிறது.
ஒரு முக்கோண காதல் கதையில் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளை தொகுத்து, அழகாய் நம்மை பயணிக்க செய்திருக்கிறார் இயக்குனர் கிஷோர் குமார். படத்தின் முடிவை ரசிகர்களின் பார்வைக்கு விட்ட விதம் புதுமை.
ஹார்ட்டின் - காதல் கேண்டீன்