விக்ரம் பிரபுவின் "சிறை" படம் எப்படி இருக்கிறது?- விமர்சனம்

இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய "சிறை" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
ஒரு கொலை வழக்கில் சிக்கும் எல்.கே.அக்ஷய்குமார், வேலூர் சிறையில் பல ஆண்டுகளாக விசாரணை கைதியாக இருக்கிறார். அவரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக விக்ரம் பிரபு உள்ளிட்ட காவலர்கள் அரசு பஸ்சில் அழைத்துச் செல்கிறார்கள்.
செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் நடக்கும் எதிர்பாராத பிரச்சினையில் காவலர்கள் சிக்கிக்கொள்ள, போலீஸ் துப்பாக்கியுடன் எல்.கே.அக்ஷய்குமார் தப்பி விடுகிறார். எல்.கே.அக்ஷய்குமாரை தேடி செல்லும் போலீசாருக்கு அவரை பற்றிய பல உண்மைகள் தெரியவர அதிர்கிறார்கள்.
எல்.கே.அக்ஷய்குமார் பிடிபட்டாரா? அவரது பின்னணி என்ன? அவரால் விக்ரம் பிரபு சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? என்ற பல்வேறு கேள்வி முடிச்சுகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.
நடிப்பில் முதிர்ச்சி காட்டி வியக்க வைத்திருக்கும் விக்ரம் பிரபு, நிஜமான போலீஸ்காரராகவே நெஞ்சில் பதிகிறார். மனசாட்சிக்கும், மனிதாபிமானத்துக்கும் இடையே சிக்கும் இடங்களில் இயல்பான நடிப்பாலும் அலங்கரிக்கிறார். இந்த புதிய விக்ரம் பிரபு இனியும் தொடரவேண்டும்.
எல்.கே.அக்ஷய்குமார் தமிழ் சினிமாவுக்கு நல்வரவு. பருவத்துக்கேற்ற அவரது தோற்றத்தின் மாற்றமும், அச்சுபிசகாத நடிப்பும் கவனிக்க வைக்கிறது. சில இடங்களில் உணர்ச்சிகளால் கலங்கடித்து விடுகிறார். அனிஷ்மா அனில்குமாரின் குழந்தைத்தனமான சிரிப்பும், அனந்தா தம்பிராஜாவின் அளவான நடிப்பும் சிறப்பு. ஹரிசங்கர் நாராயணன், ரகு இசக்கி, மூணாறு ரமேஷ் உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறையில்லை. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கிறது.
பரபரப்பான திரைக்கதை பலம். சில இடங்களில் காட்சிகளில் தொய்வு தென்படுகிறது, யூகிக்கவும் முடிகிறது. ஆங்காங்கே லாஜிக் மீறலை தவிர்த்திருக்கலாம்.
டைரக்டர் தமிழ் எழுதிய இந்த கதையில் பரபரப்பும், விறுவிறுப்பும் கூட்டியதுடன், காவல்துறையில் நிலவும் அரசியலையும் ‘நறுக்' என்று சொல்லி குட்டு வைத்திருக்கிறார், இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி.






