ரணபலி

விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’ எப்படி? - சினிமா விமர்சனம்

இப்படியும் நடக்குமா? என்று நம்ப முடியாத காட்சிகளும் படத்தில் நிறைய இருக்கின்றன.
Published on: 
cinema review(3.5 / 5)

சென்னை,

1870 காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் நடக்கும் கதை.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தானியங்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

ஆந்திரா, மும்பை, கல்கத்தா தாண்டி தமிழகத்திலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த விரும்புகிறார்கள். தமிழகத்தில் பெருமளவு தானியங்களை ஏற்றுமதி செய்தே தீருவது என்ற முடிவில் இருக்கிறார் ஆங்கிலேய அதிகாரி அர்னால்ட் ஓஸ்லோ.

இதற்கு மக்கள் உடன்பட மறுக்க மக்கள் மீது இரட்டை வரி விதிக்கிறார். சேமித்து வைத்த தானியங்களை மிரட்டி அபகரிக்கிறார். இதனால் மக்கள் தவித்துப் போகிறார்கள்.

இந்த சூழலில் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அந்த ஊரில் இருக்கும் விஜய் தேவரகொண்டா களம் இறங்குகிறார். உள்ளூர் மக்களை காப்பாற்றுவதற்காகவும், ஆங்கிலேயரின் அடக்கு முறையை ஒடுக்குவதற்காகவும் புரட்சியில் குதிக்கிறார்.

இதற்கிடையே மக்களின் உணவு தேவையை போக்குவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார். இதில் பல சோதனைகளையும் சந்திக்கிறார்.

இறுதியில் என்ன ஆனது? ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு விஜய் தேவரகொண்டா முடிவு கட்டினாரா? உள்ளூர் மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்தாரா? என்பதே மீதி கதை.

நடிப்பிலும் உடல் மொழியிலும் நன்கு தேறி இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியில் அவர் குதிக்கும் இடம் ரசிக்க வைக்கிறது. அனல் தெறிக்கும் வசனங்களும் பேசி மிரட்டுகிறார்.

ஜாடிக்கு ஏற்ற மூடியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. நிஜ வாழ்க்கையில் தம்பதியர் என்பதால் காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒத்துப் போயிருக்கிறது.

தி மம்மி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய அர்னால்டு ஓஸ்லோ இந்தப் படத்திலும் வில்லத்தனத்தில் கலக்கி இருக்கிறார். வினோத் சாகர், ஷீலா ராஜ்குமார், ஈஸ்வரி ராவ் என அனைவருமே பொருத்தமான தேர்வு.

நீரவ் ஷா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அந்த காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. அஜய் - அதுல் இசை படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது.

எதார்த்த சூழ்நிலையை விளக்கும் காட்சிகளும், புரட்சியை விதைக்கும் வீரியமான காட்சிகளும் படத்துக்கு பலம். இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்று தடுமாறி விட்டது. இப்படியும் நடக்குமா? என்று நம்ப முடியாத காட்சிகளும் நிறைய இருக்கின்றன.

எது எப்படியோ ஒரு வரலாற்று சம்பவங்களை, மக்களின் துயரங்களை பேசும் வகையில் ஒரு புரட்சி கதையை எடுத்து அதை விறுவிறுப்பான திரை கதையில் காட்சிகளாக அமைத்து கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் ராகுல் சங்ருதி.

X

Daily Thanthi
www.dailythanthi.com