"கொலைச்சேவல்" திரைப்பட விமர்சனம்

இயக்குனர் வி.ஆர்.துதிவாணன் இயக்கத்தில் கலையரசன் நடித்துள்ள "கொலைச்சேவல்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
"கொலைச்சேவல்" திரைப்பட விமர்சனம்
Published on

கலையரசனை காதலிக்கும் தீபா, பெற்றோர் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து கொள்கிறார். உறவுகளை வெறுத்து கலையரசன் குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ்கிறார். நிறைமாத கர்ப்பிணியான தீபாவை, ஊரை தாண்டியுள்ள குல தெய்வ கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார் கலையரசன். கோவில் எல்லைக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே ஏதோ ஒரு விபரீதம் அரங்கேறப் போகிறது என்பதை தீபா உணருகிறார்.

சாமி கும்பிட்டு வீடு திரும்ப நினைக்கும் கலையரசன் தீபாவை சுற்றி திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அந்த அபாயத்தில் இருந்து அவர்கள் மீண்டார்களா, இல்லையா? என்பதே பரபரப்பான மீதி கதை.

எதார்த்தமான நடிப்பால் படம் முழுக்க அலங்கரிக்கிறார் கலையரசன். வரம்பு மீறாத காதலில் வகையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். முன்பை விட நடிப்பில் தேறியுள்ளார். முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்துள்ளார். தீபா பாலு. 'ரிஸ்க்' எடுத்து அவர் நடித்துள்ள காட்சிகளுக்கு பாராட்டு.

'ஒரே மாதிரி நடிக்காதீங்க...' பாலசரவணன், உங்களிடம் திறமை நிறைய இருக்கிறது. கஜராஜின் நடிப்பும், 'ஏதாவது செய்யேன்பா...' ரகம். விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜய லட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை ஆகியோரின் நடிப்பில் குறையில்லை. வில்லனாக வரும் ஆதவ் சந்திரா கவனிக்க வைத்துள்ளார்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும், சந்தனின் இசையும் படத்துடன் ஒன்ற வைத்தாலும், சில இடங்களில் 'ஒரே மாதிரியா இருக்கே...' என்று எண்ண வைக்கிறது. வெறும் 'சவுண்ட்'டை காட்டி மட்டும் மிரட்ட முடியாதல்லவா... எதார்த்தமான கதைக்களம் பலம் என்றாலும், காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். 'இது தேவையா?' என்பது போல சில காட்சிகள் நகருகிறது. 'சிக்ஸர்' அடிப்பது போல 'பேட்'டை தூக்கிவிட்டு, 'டொக்கு' வைப்பது நியாயமா? ஆணவ கொலைக்கு எதிராக கருத்துகள் பேசி, இறுதியில் இப்படி கொடூரத்தை அரங்கேற்றி காட்டலாமா?.

சாமியே வந்து சொன்னாலும் சாதி இல்லை என்பதை யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை சொல்லி, சாதி வெறியர்களுக்கு சாட்டையடி கொடுக்க நினைத்துள்ளார் இயக்குனர் வி.ஆர்.துதிவாணன். ஆனால் அடி விழுந்தது யாருக்கோ...

கொலைச்சேவல் - பலியாடு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com