நித்தம் ஒரு வானம் : சினிமா விமர்சனம்

தான் படித்த கதையில் உள்ளது போன்று நிஜத்தில் வாழ்பவர்களை தேடிச் செல்லும் பயண காதல் ”நித்தம் ஒரு வானம்”.
நித்தம் ஒரு வானம் : சினிமா விமர்சனம்
Published on

வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் வாழும் அசோக் செல்வனுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க பெண்ணை முடிவு செய்கின்றனர். அந்த பெண் தனக்கு ஒருவனுடன் காதல் இருந்ததாகவும் அவனை பிரிந்து விட்டதாகவும் சொல்ல, நீ செய்தது தவறு என்று அசோக் செல்வன் அறிவுரை கூறுகிறார். இதில் மனம் மாறும் அவள் காதலனை தேடி செல்கிறாள். இதனால் மன அழுத்தம், கோபம் என்று ஆளே மாறிப்போகும் அசோக் செல்வனை மருத்துவர் அபிராமியிடம் அழைத்து செல்கின்றனர். அங்கு அவருக்கு இரண்டு கதைகளை கொடுத்து படிக்கச் சொல்கிறார் அபிராமி. அந்த கதைகளில் தன்னையே ஹீரோவாக நினைத்துக்கொள்கிறார். அவை கண்முன் ஷிவாத்மிகா, அபர்ணா பாலமுரளியுடன் காட்சிகளாக விரிகின்றன.

ஆனால் அந்த கதைகளில் கடைசி பக்கங்கள் இல்லை. அபிராமியிடம் இதைக்கேட்கும்போது அவர்கள் எல்லோரும் நிஜத்தில் வாழ்பவர்கள் என்று சொல்ல அவர்களைக் காணச் செல்கிறார் அசோக் செல்வன். அந்த பயணத்தில் ரிதுவர்மாவும் இணைகிறார். கதையில் படித்தவர்களை சந்தித்தாரா? இதன் மூலம் அவர் வாழ்க்கையில் நடந்த மாற்றம் என்ன என்பது படம். அசோக் செல்வன் கதையின் நாயகனாகவும், அவர் படிக்கும் கதையின் கதாபாத்திரங்களாகவும் அழகாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

பல இடங்களில் அப்பாவியாகவும் அதிரடியாகவும், கலங்க வைக்கவும் நடிக்க கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார். மீனாட்சியாக வரும் ஷிவாத்மிகா முகத்தில் சிறிய உணர்வுகளையும் அபாரமாக வெளிப்படுத்தி அந்தக்கால சரிதாவை நினைவுபடுத்துகிறார். அபர்ணா பாலமுரளி இன்னும் ஒரு படி மேலே போய் மனதை தொடுகிறார்.

ரிதுவர்மா தனியாக தெரிகிறார். காதல் கதையை அழகான காட்சிகள் மூலம் கவித்துவமாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ரா. கார்த்திக். நாயகன் யாரை திருமணம் செய்து கொள்கிறார். கதை மாந்தர்களை எப்படி எங்கே சந்திக்கிறார் என்பதில் பல முடிச்சுகள் இருக்கின்றன.

விது அய்யனாரின் கேமரா காட்சிகளை அழகாக்கி இருக்கிறது. கோபி சுந்தரின் இசை பலம். படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். பழைய காதல் கதை மாதிரி தெரிந்தாலும் அதை நவீனப்படுத்தி புதுமையாக கொடுத்து இருப்பது சிறப்பு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com