

ரச்சிதா மகாலட்சுமி - சபரி தம்பதி, சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66-ம் எண் வீட்டை வாங்கி அதில் குடியேறுகிறார்கள். அதே அடுக்குமாடி குடியிருப்பின் 99-ம் எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுக்கும், ரச்சிதாவுக்கும் நட்பு ஏற்படுகிறது.
அந்த குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவரான எம்.எஸ்.மூர்த்தி, இரவு நேரங்களில் குடியிருப்பை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம், அவரை ஆந்தை ஒன்று தடுத்து நிறுத்தி வருகிறது.
இதற்கிடையில் ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்யப்போவதாக உணரும் ரச்சிதா மகாலட்சுமி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வீட்டுக்கு செல்கிறார். அப்போதுதான் அந்த 99-ம் எண் வீட்டில் யாரும் இல்லை என்பதும், அந்த வீட்டில் வசித்த ஸ்வேதா ஏற்கனவே இறந்து போனவர் என்பதும் தெரியவருகிறது.
ரச்சிதாவின் கண்களுக்கு மட்டுமே தெரியும் ஸ்வேதா யார்? ரச்சிதாவை ஸ்வேதா ஏன் சந்திக்க வருகிறார்? இரவில் எம்.எஸ்.மூர்த்தியை ஆந்தை துரத்துவதின் காரணம் என்ன? என்ன தான் நடந்தது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது திகிலான மீதி கதை.
ரச்சிதா மகாலட்சுமி எதார்த்தமான நடிப்பால் கலக்குகிறார். அவரது உடலில் ஆவி புகுந்து ஆவேசம் அடையும் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார். கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அவரது நடிப்பு ஸ்கோர் செய்கிறது.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா நல்ல மனதுக்கு சொந்தக்காரராக வருகிறார். அவரது முடிவு சோகம்.
சபரி மற்றும் ரோகிந்த் இருவரும் புதுமுகங்கள் என்றாலும், அலட்டாத நடிப்பால் அலங்கரிக்கிறார்கள். சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோரது நகைச்சுவையும், பவன் கிருஷ்ணா, எம்.எஸ்.மூர்த்தி, பி.எல்.தேனப்பன் ஆகியோரது கதாபாத்திரங்களும் சரியாக பொருந்துகிறது. சிறப்பு தோற்றத்தில் வரும் கே.ஆர்.விஜயா கவனிக்க வைக்கிறார்.
சேவிலோ ராஜாவின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற செய்கிறது. எம்.எஸ்.மூர்த்தியின் இசை திகிலூட்டுகிறது.
திகில் நிறைந்த பரபரப்பு காட்சிகள் படத்துக்கு பலம். இரண்டாம் பாதி இன்னும் வேகமாக இருந்திருக்கலாம்.
திகில் படங்களுக்கு என்று இருக்கும் வழக்கமாண பாணியோடு கதை சொல்லியிருந்தாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களையும் தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர் எம்.எஸ்.மூர்த்தி. கிளைமேக்ஸ் திக்... திக்... திக்...