மத பயங்கரவாதம் குறித்த கதை: ‘எப்.ஐ.ஆர்' சினிமா விமர்சனம்

இரக்கம் இல்லாமல் ஒரு சில தீவிரவாதிகள் செய்யும் கொடூர செயலுக்கு இந்தியாவில் அப்பாவி மக்களும் பலிக்கு ஆளாகின்றனர் என்ற முக்கிய கருத்தை இந்த படம் கூறி உள்ளது. மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் முஸ்லிமாக பல விஷங்களை நுணுக்கமாக சிந்தித்து அந்த கதாபாத்திரத்திற்கு வலு கூட்டி உள்ளார்.
மத பயங்கரவாதம் குறித்த கதை: ‘எப்.ஐ.ஆர்' சினிமா விமர்சனம்
Published on

ராட்சசன் வெற்றி படத்தை அடுத்து விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்திருக்கும் படம். தாய்க்கு மகனும், மகனுக்கு தாயுமாக வாழ்ந்து வரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் விஷ்ணு விஷால். ஒரு கட்டத்தில் நண்பனின் வேலையை இவர் ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதுவே அவருக்கு பாதகமாக அமைகிறது.

விமான நிலையத்தில் அவருடைய செல்போன் காணாமல் போகிறது. அதன் மூலம் அவர் ஒரு பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு சிறைக்குள் அடைத்து சித்ரவதை செய்கிறார்கள். அவருடைய அம்மாவின் வேலை பறிபோகிறது. விஷ்ணு விஷாலை நிரபராதி என்று நிரூபிக்க போராடுகிறார் காதலி மஞ்சிமா மோகன்.

ஒரு சந்தர்ப்பத்தில் போலீசின் சித்ரவதைகளை தாங்க முடியாமல், நான் பயங்கரவாதிதான் என்று விஷ்ணு விஷால் பழிகளை எல்லாம் தன் தலையில் போட்டுக்கொள்கிறார். அவர் மீதான பொய்யான பழிகள் எல்லாம் அவரை பாதித்தனவா, இல்லையா? என்பது கிளைமாக்ஸ்.

விஷ்ணு விஷாலுக்கு இன்னொரு திருப்பமாக அமைந்த படம் இது. எந்த குற்றமும் செய்யாத இஸ்லாமிய இளைஞராக மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டை காட்சிகளில் புதிய அத்தியாயம் படைத்து இருக்கிறார். ஒவ்வொரு சண்டை காட்சியும் சரியான சவால்.

மஞ்சிமா மோகன் வக்கீல் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன், கவுரவ் நாராயண் ஆகிய இருவரும் உயர் அதிகாரிகளாக வருகிறார்கள். இருவருக்கும் வித்தியாசமான குரல் வளம்.

இரவு நேர சென்னை நகரையும், அதிகாலை சென்னையையும் அழகும், ஆபத்தும் கலந்து படமாக்கி இருக்கும் விதத்துக்காக ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட்டை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனு ஆனந்த் இயக்கியிருக்கிறார்.

படம் முழுக்க நிறைய நடிகர்கள். அதுவும் புதுமுகங்களாக இருப்பதால் குழப்பம். யார் யார் என்ன கதாபாத்திரம் என்பதை புரிந்துகொள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இடைவேளைக்குப்பின் காட்சிகள் மின்னல் வேகத்தில் பயணிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com