ஓராண்டுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் ஷேன் நிகாமின் 'பல்டி'

இப்படம், கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஓராண்டுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் ஷேன் நிகாமின் 'பல்டி'
Published on

மலையாள நடிகர் ஷேன் நிகாம் நடிப்பில் வெளியான 'பல்டி' திரைப்படம், திரையரங்குகளில் வெளியான ஓராண்டுக்கும் மேலாக எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அதன் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கபடியை மையமாகக் கொண்ட விளையாட்டு திரைப்படம்

'பறவ', 'கும்பளாங்கி நைட்ஸ்', 'இஷ்க்' உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகாம். தமிழில் 'மெட்ராஸ்காரன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், அதன் பிறகு தனது 25-வது படமான 'பல்டி' திரைப்படத்தில் நடித்தார்.

உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவானது. இயக்குநராக உன்னி சிவலிங்கத்தின் முதல் மலையாள திரைப்படமான இதை சந்தோஷ் குருவில்லா தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தில் கபடி வீரராக ஷேன் நிகாம் நடித்திருந்தார். அவருடன் பிரீத்தி அஸ்ரானி, சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விளையாட்டு, குடும்பம் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்துடன் உருவான இப்படம், கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 10-ல் ஓடிடி ரிலீஸ்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான 'பல்டி' திரைப்படம், ஓராண்டுக்கும் மேலாக எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகாமல் இருந்தது. இதனால் டிஜிட்டல் வெளியீட்டை ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், வருகிற ஜூலை 10-ஆம் தேதி, சோனி லைவ் (Sony LIV) ஓடிடி தளத்தில் 'பல்டி' திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள், தற்போது இந்த விளையாட்டு நாடகத் திரைப்படத்தை ஓடிடியில் காண ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com