ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி காபி செடிகளை வனத்துறையினர் வெட்டி சாய்த்ததாக விவசாயி புகார்

கூடலூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி 1 ஏக்கரில் பயிரிட்டு இருந்த காபி செடிகளை வனத்துறையினர் வெட்டி சாய்த்ததாக ஆர்.டி.ஓ.விடம் விவசாயி புகார் அளித்தார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி காபி செடிகளை வனத்துறையினர் வெட்டி சாய்த்ததாக விவசாயி புகார்
Published on

காபி செடிகள் வெட்டி சாய்ப்பு

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவர் பங்களாகுன்னு பகுதியில் 1 ஏக்கர் பரப்பளவில் காபி செடிகளை பயிரிட்டு இருந்தார். தற்போது காபி பழங்கள் அறுவடை சீசன் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வன நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக கூறி ராமச்சந்திரன் பயிரிட்டு இருந்த காபி செடிகள், வாழை மரங்களை வனத்துறையினர் வெட்டி சாய்த்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கூடாரத்தையும் வனத்துறையினர் பிடுங்கி எறிந்தனர். வனத்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கூடலூர் ஆர்.டி.ஓ., வன அலுவலர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

பல லட்சம் ரூபாய் நஷ்டம்

பங்களாகுன்னு பகுதியில் 1 ஏக்கர் பரப்பளவில் காபி செடிகள் பயிரிட்டு அறுவடை செய்யக்கூடிய சமயத்தில் வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி காபி செடிகளை வெட்டி சாய்த்து விட்டனர். கடந்த 2003, 2006, 2010 ஆகிய ஆண்டுகளில் இதுபோன்ற நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வன ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனநிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் மேற்கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com