‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
Published on

சேறும், சகதியுமான சாலை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மந்தை திடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண், போடிநாயக்கன்பட்டி.

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் ஆனைக்குளம் ஊராட்சி அன்னலட்சுமிபுரத்துக்கு முன்பு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த பஸ் இதுநாள் வரை மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மீண்டும் டவுன் பஸ்சை இயக்க வேண்டும்.

அரிராமு, அன்னலட்சுமிபுரம்.

ஆதார் மையம் வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுற்று வட்டார பகுதி மக்கள் ஆதார் எடுப்பதற்கு தினந்தோறும் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே தொண்டி பகுதிக்கு என தனியாக ஆதார் சேவை மையத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.

பொதுமக்கள், தொண்டி.

சுகாதார சீர்கேடு

மதுரை திருநகர்-திருமங்கலம் ஜி.எஸ்.டி. ரோட்டில் டாஸ்மாக் கடை அருகில் உள்ள நிலையூர் பி.ஆர்.சி. காலனி கண்மாயில் சிலர் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை அதிக அளவில் கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சரவணன், தனக்கன்குளம்.

சுகாதார வளாகம் தேவை

மதுரை மாவட்டம் எழுமலை அருந்ததியர் காலனியில் சுகாதார வளாகம் வசதி இல்லை. இதன் காரணமாக இப்பகுதிய சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்க வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கிருஷ்ணமூர்த்தி, எழுமலை.

அறிவிப்பு பலகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலை பகுதியில் உள்ள உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி முன்பு சமீபத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் அந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே வேகத்தடை உள்ள இடத்தில் அறிவிப்பு பலகை வைத்து இரவில் மிளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.

ஐஸ்வர்யா. காரைக்குடி

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com